தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1986 - 89 நிகழ்வுகள் !
(சுவடு.31) ஆக்க வாரீர் அறிவியல் தமிழ் !
இராணி வார இதழ் “ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்” என்னும் திட்டத்தை 1986 – ஆம் ஆண்டு தொடங்கியது.
இப்பகுதிக்கு தமிழறிஞர் ஔவை து.நடராசன் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார்..
புதிய கலைச் சொற்களை உருவாக்கி அனுப்புமாறு நேயர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தனர். இப்பகுதிக்கு நான் உருவாக்கிய புதிய கலைச் சொற்களை அனுப்பலானேன் !
நான் உருவாக்கித் தொகுத்து அனுப்பிய புதிய கலைச் சொற்களும்,
அச் சொற்களுக்கான விளக்கமும், ஔவை நடராசன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு
“இராணி” வார இதழில் அவ்வப்போது வெளியாகத் தொடங்கின.
இவ்வாறு நான் அனுப்பிய சொற்களும் அவற்றுக்கான விளக்கமும் 1986
–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 –ஆம் நாளிட்ட
“இராணி” இதழில் முதன் முதல் வெளியாகியது
!
ஏதோவொரு பணியின் நிமித்தம்
சென்னை சென்றிருந்த நான் சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நாகைக்கு, திருவள்ளுவர்
அரசுப் போக்கு வரத்துக் கழகப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பேருந்து திண்டிவனம்
பேருந்து நிலையத்தில் நள்ளிரவு 12-00 மணி வாக்கில் வந்து நின்றது
!
பேருந்திலிருந்து இறங்கித்
தேநீர் அருந்தலாம் என்று கடைக்குச் சென்றேன். அக்கடையில்,
அப்பொழுது வந்து இறங்கிய “இராணி” புத்தகக் கட்டினைப் பிரித்து இதழ்களைத் பார்வைக்கு
வைத்துக் கொண்டிருந்தனர். மனதில் சிறு குறு குறுப்புடன் ஒரு
“இராணியை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன் !
“இராணி”யில் 16 ஆம் பக்கத்தில் நான் அனுப்பி இருந்த சொற்களும்
அவற்றுக்கான விளக்கமும் வெளியாகி இருந்தது. “ஆக்க வாரீர் அறிவியல்
தமிழ்” என்னும் தலைப்பிட்டு அதன் கீழே ”நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மேலாளராக இருக்கும் வை.வேதரெத்தினம் சில கலைச் சொற்களைப் படைத்து அனுப்பி இருக்கிறார் !”
புதிய கலைச் சொற்களை அதிக
அளவில் படைத்து அனுப்பும் வாசகர்களுக்கு “இராணி”
வெள்ளி விழாவையொட்டி சிறப்புப் பரிசு வழங்கப்படும்“ என்ற குறிப்புடன் புதிய கலைச் சொற்களின் பட்டியல் வெளியாகி இருந்தது.
அதைப் பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
!
தொடர்ந்து நான் அனுப்பிய
கலைச் சொற்களின் பட்டியல், உரிய விளக்கங்களுடன்
23-11-1986, 04-01-1987, 25-01-1987, 26-04-1987, 14-06-1987, 26-07-1987 மற்றும் 20-09-1987 நாளிட்ட இராணி இதழ்களில் வெளியாகின. ஒவ்வொரு முறை வெளியாகும்
போதும், எனக்கு இராணி நிறுவனம் அன்பளிப்பாக உருபா
25-00 அனுப்பிக் கொண்டிருந்தது.
ஒருமுறை நான் VIDEO என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல்லாக “காண்மியம்” என்பதைக் குறிப்பிட்டு, அதற்கான என் விளக்கத்தையும் “ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்” பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை ஆய்வு செய்த திரு ஔவை நடராசன் அவர்கள் ”காண்மியம்” என்பதைச் சற்று மாற்றி “காணொலி” என்று திருத்தம் செய்து வெளியிட்டு இருந்தார். அந்தச் சொல் தான் தமிழகத்தின் இன்று பரவலாக வழக்கில் இருந்து வருகிறது !
“இராணி”
இதழில் எனது கலைச் சொற்கள் எட்டு முறை வெளியானதும் அதற்கு அவ்வப்போது
அன்பளிப்புத் தொகை கிடைத்ததும் என் தமிழ் ஆர்வத்திற்கு மேலும் மேலும் தூண்டுகோலாக இருந்தது
!
நாகப்பட்டினத்தில் பயிற்சி நிலைய அலுவலர் குடியிருப்பில் வாழ்ந்து வருகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மனதிற்குத் துன்பம் தருவதாக அமைந்துவிட்டது. ஒரு ஞாயிற்றுக் கிழமை, குடும்பத்துடன் திருத்துறைப்பூண்டி இணைமான் (சகலை) திரு.ப.மா.சுப்ரமணியன் அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தேன் !
மறு நாள் திங்கள் கிழமை
தற்செயல் விடுப்பு. ஞாயிற்றுக் கிழமை இரவு,
யாரோ என் குடியிருப்பின் தலைவாயில் கதவுப் பூட்டை
உடைத்துவிட்டு, உள்ளே நுழைந்திருக்கின்றனர் !
உள்ளே இருந்த நிலைப் பேழையைத்
திறந்து சில பட்டுப் புடைவகள், பட்டு வேட்டி ஆகியவற்றை மட்டும்
திருடிக் கொண்டு, வெட்புலமாக இருந்த ஒரு உடைப் பெட்டி
(SUIT CASE) ஒரு மின்கலக் கைவிளக்கு (FIVE CELL TORCH LIGHT)
ஆகியவற்றையும் எடுத்துச் சென்றிருந்தனர். நகைகளை
அணிந்து கொண்டு திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டதால், நகை இழப்பு
ஏற்படவில்லை !
இந்த நிகழ்வுக்குப் பிறகு
நாகையில் இருக்க வேண்டாம் என்று மனதில் எண்ணம் தோன்றியது. அப்போது காலமுறை இடமாற்றம் (PERIODICAL TRANSFER) நிகழக்
கூடிய நேரம். சேலத்திற்குச் சென்றுவிடலாம் என்று கருதி,
விண்ணப்பித்தேன்; இடமாற்றல் கிடைத்தது
!
1987 ஆம் ஆண்டு
மார்ச்சு மாதம் 30 ஆம் நாள் நாகப்பட்டினத்தில் அலுவலக மேலாளர்
பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, பணியினின்று விடுவிப்புப் பெற்றேன்
!
பணியேற்பு இடைக்காலத்திற்குப்
பிறகு ஏப்பிரல் 8 ஆம் நாள் சேலத்திற்குச் சென்று பணியை ஏற்றுக்
கொண்டேன். சிலநாள் அங்குள்ள துச்சிலில் (GUEST ROOM) தங்கிக் கொண்டு வீடு பார்க்கத் தொடங்கினேன் !
சேலம் மையச் சிறைச்சாலைக்கு
எதிர்ப்புறம் உள்ளது திருநகர். இங்கு திரு.பச்சை உடையார் என்பவர் வீட்டினை வாடகைக்கு அமர்த்தி விட்டு, நாகை திரும்பி, வீட்டு உடைமைகளைச் சுமையுந்தில் ஏற்றி
அனுப்பிவிட்டு, குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, பேருந்தில் சேலம் வந்தேன் !
திரு.பச்சை உடையார் வீட்டில் வந்து இறங்கிய வீட்டு உடைமைகளை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு,
மற்ற பணிகளைக் கவனிக்கலானேன் !
போக்குவரவுக்கு ஈருருளிக்கு
மாற்றாக வேறு வண்டி ஒன்று வாங்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, எந்த வண்டியை வாங்கலாம் என்பதைப் பற்றி ஆய்வு செய்து, இறுதியில் “சில்வர் பிளஸ்” வாங்கினேன்
!
மகன் இளம்பரிதியை சாரதா
மேனிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பிலும், மகள் கவிக்குயிலை, ஆண்டர்சன் நடுநிலைப் பள்ளியில்
3 ஆம் வகுப்பிலும், இன்னொரு மகள் இளவரசியை இதே
பள்ளியில் மழலையர் மேல்வகுப்பிலும் சேர்த்தேன் !
இளம்பரிதி நகரப் பேருந்தில்
பள்ளிக்குச் சென்று வருவார். மகள்கள் இருவரையும்,
நான் வாங்கியிருந்த சில்வர் பிளஸ் உந்துருளியில் அழைத்துச் சென்று பள்ளியில்
விடுவேன்; மாலை திரும்ப அழைத்து வருவேன் !
சேலத்தில் என் வாழ்க்கை
இவ்வாறு மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, கடிநெல்வயலில்
என் சிற்றப்பா மகன் திரு.கனகராசனுக்குத் திருமணம் செய்விக்க முடிவு
செய்தார்கள் !
தன்னுடைய தாய்மாமா மகளான
சுமதியை இவர்
மணந்தார். 1987 -ஆம் ஆண்டு ஆகத்து மாதம்,
21 ஆம் நாள் திரு.கனகராசன் – செல்வி.சுமதி திருமணம் திருத்துறைப்பூண்டி மங்களநாகி திருமண மண்டகத்தில் இனிது நிறைவேறியது ! சேலத்திலிருந்து நான் மட்டும் சென்று
திருமணத்தில் கலந்து கொண்டதாக நினைவு !
இந்த ஆண்டின் இறுதியில்
தமிழக அரசியல் அரங்கில் ஒரு துன்பியல் நிகழ்வு. ஆம் !
தமிழக முதல்வராக இருந்த ம.கோ.இரா. (M.G.R) 1987 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24 ஆம் நாள் மறைந்தார். ம.கோ.இரா. மறைவை அடுத்து திரு.இரா.நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வரானார்
!
இடைக்கால முதல்வர் பதவியில்
07-01-1988
வரை நெடுஞ்செழியன் நீடித்தார். பின்பு சட்டமன்றக்
கட்சித் தலைவராக ம.கோ.இரா.வின் மனைவி சானகி அம்மையார்
தேர்வு செய்யப் பெற்றதைத் தொடர்ந்து அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார் !
தமிழக முதலமைச்சராக
7-01-1988 அன்று பதவியேற்ற சானகி அம்மையாரை செயலலிதா தலைமையிலான ஒரு
குழுவினர் ஏற்க மறுத்தனர். இதன் விளைவாக சட்டமன்றத்தில் அவர்
தனது பெரும்பான்மையை மெய்ப்பிக்க முடியவில்லை !
சானகி அம்மையார் ஆட்சி
30-01-1988 அன்று கவிழ்ந்தது..
இதைத் தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப் பெற்று, தமிழகத்தில்
குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப் பெற்றது !
அ.இ.அ.தி.மு.க, சானகி அணி, செயலலிதா அணி என
இரண்டாகப் பிளவு பட்டது. 30-01-1988 முதல் நடைபெற்று வந்த குடியரசுத்
தலைவர் ஆட்சி ஓராண்டு நீடித்தது !
சேலம் திருநகர் திரு.பச்சை உடையார் வீட்டில், குடியிருந்து வந்த எனக்கு, அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 246 –ஆம் இலக்க வீட்டை ஒதுக்கீடு செய்து 17-02-1988 அன்று வீட்டு வசதி வாரிய அலுவலகம் ஆணை தந்தது. நான் எதிர்பார்த்திருந்தபடி வீடு ஒதுக்கீடு கிடைத்தமையால் 246 –ஆம் இலக்க வீட்டிற்கு 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 –ஆம் நாள் குடி வந்தேன் !
1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது ! இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டன. தி.மு.க அணியில் அக்கட்சி 150 இடங்களும், மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 15 இடங்களும், சனதாக் கட்சி 4 இடங்களும் பெற்றன !
சேலம் திருநகர் திரு.பச்சை உடையார் வீட்டில், குடியிருந்து வந்த எனக்கு, அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 246 –ஆம் இலக்க வீட்டை ஒதுக்கீடு செய்து 17-02-1988 அன்று வீட்டு வசதி வாரிய அலுவலகம் ஆணை தந்தது. நான் எதிர்பார்த்திருந்தபடி வீடு ஒதுக்கீடு கிடைத்தமையால் 246 –ஆம் இலக்க வீட்டிற்கு 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 –ஆம் நாள் குடி வந்தேன் !
1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது ! இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டன. தி.மு.க அணியில் அக்கட்சி 150 இடங்களும், மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 15 இடங்களும், சனதாக் கட்சி 4 இடங்களும் பெற்றன !
அ.இ.அ.தி.மு.க (செயா) அணியில் அக்கட்சி
27 இடங்களும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
3 இடங்களும் பெற்றன !
இந்தியப் பேராயக் கட்சியும்
சானகி அணியும் கூட்டு சேர்ந்து போட்டியிட்டதில், பேராயக்கட்சி
(CONGRESS) 27 இடங்களும், சானகி அணி 2 இடங்களும் பெற்றன. கருணாநிதி மூன்றாவது முறையாக ஆட்சியில்
அமர்ந்தார் ! அவரது பதவி ஏற்பு விழா 27-01-1989 நடைபெற்றது !
அரசியல் களத்திலிருந்து
பணிக் களத்திற்கு வருவோம். சேலம் தொழிற்பயிற்சி பயிற்சி நிலையத்திற்கு
மூன்று அலுவலக மேலாளர் பணியிடங்கள் ஒப்பளிக்கப் பட்டிருந்தன. விருதுநகரைச் சேர்ந்த திரு.மாரியப்பன் பணியமைப்பு பிரிவைக்
கவனித்து வந்தார் !
சேலத்தைச் சேர்ந்த திரு.ஜி.பி.நாகராசன் கணக்குப் பிரிவைக்
கவனித்து வந்தார். எனக்கு பண்டகப் பிரிவும், பயிற்சிப் பிரிவும் ஒதுக்கப்பட்டன. நாகை திரு.முகமது கனி யூசூப் ஆட்சி அலுவலர். திரு.தா.அரங்கநாதன் துணை இயக்குநர் நிலை முதல்வர்
!
சேலத்திலிருந்து மன்னார்குடி
240
கி.மீ தொலைவில் இருந்தது. பயண நேரம் 6.30 மணி. இதனால் குழந்தைகளையும்
அழைத்துக் கொண்டு மாமனர் ஊருக்குச் சென்று வருவது கடினமான பயணமாகவே இருந்தது
!
இந்த நிலையில் எனது இன்னொரு
மைத்துனர் திரு.பிரகலாதன் என்பவருக்குத் திருமணம் முடிவாகி
இருந்தது. அசேசம் என்னும் ஊரைச் சேர்ந்த திரு.ஆர்.அமிர்தகடேசன் என்பவரின் மகள் செல்வி.அன்பரசியை அவர் மணப்பதாக உறுதிசெய்யப்பட்டு
1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் திருமணம்
நடந்தேறியது ! குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு சென்று திருமணத்தில் கலந்துகொண்டு சேலம் திரும்பினேன்
!
இந்திய நாடாளு மன்றத்திற்கான
பொதுத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
இத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. இந்தியப் பேராயக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தது.
அ.இ.அ.தி.மு.க 11 இடங்களிலும் இந்தியப் பேராயக்கட்சி 27 இடங்களிலும் வென்றன.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஒரு இடத்தில் வென்றது. தி.மு.க.வுக்கு
ஒரு இடம் கூடக் கிடைக்க வில்லை !
1984 ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் இந்திரா காந்தி துப்பாக்கிச் சூட்டில்
இறந்த பின்பு தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற இராசீவ் காந்தி திசம்பர் 1984
–ல் நாடாளுமன்றத்திற்குத் திடீர்த் தேர்தலை நடத்தி 404 இடங்களை வென்று மிகுந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்தார். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையால் அவரது செல்வாக்கு
சரிந்திருந்தது !
இதனால்
1989 பொதுத் தேர்தலில் இந்தியப் பேராயக் கட்சி 197 இடங்களை மட்டுமே வென்றது. எதிர்கட்சிகள் சனதா தளம் என்ற
பெயரில் கூட்டணி அமைத்து திரு.வி.பி.சிங் தலைமையில் 2-12-1989 அன்று ஆட்சி அமைத்ததன. திரு.வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் தான்
மண்டல் குழு அமைக்கப்பட்டு, பிற்பட்டவர்களுக்கு 27 % இட ஒதுக்கீடு அளித்து ஆணை வழங்கப்பட்டது. காவேரி ஆற்றுநீர்
பகிர்வு ஆணையம் அமைக்கப்பட்டது !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
தி.பி: 2051, விடை(வைகசி),07]
{20-05-2020}
----------------------------------------------------------------------------------------------
அரசினர்
தொழிற் பயிற்சி நிலையம்
சேலம்
சேலம்
குமரகிரி கோயில்.
ஆக்க வாரீர் அறிவியல் தமிழ் !
ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்
வெளியான
இராணி முதல் இதழ் !
ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்
வெளியான
இராணியின் பிற இதழ்கள் !
திரு.கனகராசன் செல்வி.சுமதி
திருமண அழைப்பிதழ்.
திருமணம் நடைபெற்ற நாள் :
21-08-1987.
திரு.பிரகலாதன் - செல்வி.அன்பரசி
திருமண அழைப்பிதழ்.
திருமண நாள்:
10-09-1989.
சேலத்தில் வாழ்கையில்
நான் வாங்கிய
“சில்வர் பிளஸ்” உந்தூர்தி.
No comments:
Post a Comment