name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (14) :1967-68 நிகழ்வுகள் - புதுகைப் பூங்கா !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (14) :1967-68 நிகழ்வுகள் - புதுகைப் பூங்கா !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1967-68 நிகழ்வுகள் !

                                     (சுவடு.14) புதுகைப் பூங்கா !

----------------------------------------------------------------------------------------------

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் இளைஞர்களுக்கு இரண்டு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவை புரிவியல் (PRACTICAL) மற்றும்  தெரிவியல் (THEORY). புரிவியல் என்பதுசெய்து பழகுவது.” தெரிவியல் என்பதுபடித்து அறிவது” !

எடுத்துக் காட்டாக, ஒருக்கியல் (WELDER) பிரிவில் ஒரு கூடை நாற்காலி (BASKER CHAIR) செய்து பழகுவதாக வைத்துக் கொள்வோம். இதைச் செய்து பழகுவதற்கு ஒருக்கியல் ஈருள் (WELDING TRANSFORMER) அல்லது ஒருக்கியல் ஈன்பொறி (WELDING GENERATOR) போன்ற எந்திரங்களும், வேறு சில கருவிகளும் (HAND TOOLS), இரும்புக் கம்பி போன்ற மூலப் பொருள்களும் (RAW MATERIALS), ஒருக்கியல் மின்குச்சி (WELDING ELECTRODE) போன்ற நுகர் பொருள்களும் (CONSUMABLES) தேவை !

இந்தப் பொருள்களை எல்லாம், தேவைப்படும் அளவுக்கு முன்னதாகவே திட்டமிட்டு  வாங்கிப் பண்டகத்தில் இருப்பு வைத்துக் கொண்டு, பயிற்சிக்குத் தேவைப் படுகையில் வழங்குதல் பண்டகக் காப்பாளரின் பணி. உலக வாழ்க்கையில் இயல்பாக ஒரு மனிதன் பார்த்தறியாத பொருள்களை எல்லாம் நேரில் பார்ப்பதுடன், அவற்றின்  கட்டமைப்பு (STRUCTURE) என்ன, அவற்றின் பயன்கள் யாவை என்பன பற்றியெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு, பண்டகக் காப்பாளருக்குக் கிடைக்கிறது !

“DRILL BIT” என்னும் கருவியை எல்லா மனிதர்களும் பார்த்திருக்க முடியாது. அவை எத்தகைய உருக்கினால் (STEEL) செய்யப்பட்டிருக்கிறது, அவற்றின் முகப் பகுதியின் வெட்டுக் கோணம் (CUTTING ANGLE) என்ன, அவற்றின் கால் (SHANK), பீலி (FLUTE) ஆகியவை எத்தனை வகைகள் உள்ளன என்பன போன்ற அத்துணைச் செய்திகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு, பண்டகக் காப்பாளருக்கு அன்றி வேறு யாருக்கும் கிடைக்காது !

இத்தகைய நல்வாய்ப்பையும், நேரடித் துய்ப்பையும் (EXPERIENCE) பெற்றிருந்த காரணத்தால், பயிற்சி நிலையங்களில் பயன்பாட்டில் இருக்கும் அத்துணைப் பொருள்களுக்கும் தமிழில் பொருத்தமான பெயரை ஆக்கி அளித்திட என்னால் முடிந்தது. ”அகரமுதலிஎன்னும் முகநூற் குழுவின் பக்கத்தைத் திறந்து பார்ப்போர், நான் ஆக்கி அளித்துள்ள புதிய சொற்களைக் காணலாம் !

நான், புதுக்கோட்டையில் வாழ்ந்து வந்த அதே நேரத்தில், அம்மாவும் இரண்டு தங்கைகளும் திருத்துறைப்பூண்டியில் மாமா வீட்டிற்குப் பக்கத்திலேயே திரு.சுந்தரம் ஐயர் என்பவரது வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தனர். அப்போது எனக்கு ஒரு மாத ஊதியம் உருபா 192 - 00. இந்தத் தொகையில் சில பிடித்தங்கள் போக உருபா 175 - 00 கையில் கிடைக்கும் !

இதில் வீட்டு வாடகை, உணவுச் செலவு, மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக உருபா 75 - 00  வைத்துக்கொண்டு, வீட்டிற்கு உருபா 100 – 00 தந்து  வந்தேன். பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும்  முதல் வாரத்தில் வரும் சனி ஞாயிறு நாள்களில் திருத்துறைப்பூண்டிக்கு நேரில் சென்று பணத்தைத் தருவதுடன், ஓரிரு நாள் அன்னை, தங்கைகளுடன் தங்கி இருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன் !

மாமா வீட்டை விட்டு வெளியேறித் தனியாக அம்மாவும் தங்கைகளும் தங்குவதற்கு முன்னதாக என் முதல் தங்கையான கல்யாணிக்குத் திருமண வாய்ப்பு வந்தது. மாப்பிள்ளை திரு..இராமமூர்த்தி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இடும்பாவனம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். குடும்பத்தில் இவரும் இவர் அன்னையும் மட்டுமே இருந்தனர் !

கடிநெல்வயல் பெரியப்பா திரு.சீ.அருணாச்சலத் தேவர் அவர்களின் துணையுடன், திருமணப் பேச்சுகளை நானே முன்னின்று நடத்தி முடிவு செய்து திருமணத்தையும் நடத்தி வைத்தேன். திருமணச் செலவு அதிகம் இல்லையாயினும், அத்துணைச் செலவுகளையும் நானே ஏற்க வேண்டியதாயிற்று !

இந்தச் சூழ்நிலையில், பெரியப்பா, தன் இளைய மகன் திரு.சீனிவாசனை ஏதாவது பயிற்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று என்னிடம் கவலையுடன் எடுத்துரைத்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் திரு.சீனிவாசனை, நான் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 1967 ஆம் ஆண்டு ஆகத்து மாதம்  “எந்திரப் பணியியல்” (MACHINIST) பிரிவில் பயிற்சியில் சேர்த்துவிட்டேன் ! . 

ஈராண்டுகள் பயிற்சி ! அப்போது எந்திரப்பணியியல் பிரிவுப் பயிற்றுநர்களாக திரு.இலட்சுமிபதி, திரு.சம்பத் ஆகியோர் பணியாற்றி வந்தனர். பயிற்சிக் காலத்தில் மாதம் உருபா 20 – 00 உதவித் தொகை திரு.சீனிவாசனுக்குக் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருந்தேன் !

என்னுடன் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்து வந்த திரு.ஆழ்.சகதீசன், தன் சொந்த விருப்பத்தின் பேரில் பரமக்குடிக்கு மாற்றலாகிச் சென்றதனால், நாங்கள் தங்கியிருந்த வீட்டை, உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்க விரும்பினார். ஆகையால் நான் தங்குவதற்கு வேறு இடம் பார்க்க வேண்டி நேரிட்டது !

அப்பொழுது பொருத்துநர் பிரிவில் பயிற்சி பெற்று வந்த திரு.சுந்தரம் என்னும் மாணவர் மூலம், அவருடைய உறவினரான திரு.இலட்சுமிநாராயண அய்யர் வீட்டில் உள்ள முன்புற அறை ஒன்றை வாடகைக்கு விட இருப்பதாகத் தெரிய வந்தது. புதுக்கோட்டையின் ஒரு பகுதியான திருக்கோகர்ணத்தில் பெரிய தெருவில் திரு.இலட்சுமிநாராயண அய்யர் வீடு இருந்தது !

திரு.சுந்தரத்துடன் சென்று அந்த அறையைப் பார்த்தேன். வீட்டின் முன்புறத் திண்ணையில் சுவர் வைத்துத் தடுத்து, நிலைக் கதவும் பொருத்தி அமைத்த 12’ X 8’ அளவுள்ள அறை. அறையின் முன்புறம் சீமை ஓடு வேய்ந்த சரிவான கூரை. அதன் கீழ் நண்பர்கள் ஓரிருவர் வந்தால் அமரக் கூடிய சுற்றடைப்புடன் கூடிய சிற்றறை. எனக்குப் பிடித்திருந்தது. மாத வாடகை உருபா 15 – 00 எனப் பேசி முடிவு செய்து அடுத்த ஓரிரு நாளில் அறைக்கு வந்துவிட்டேன் !

திருக்கோகர்ணம் திரு.இலட்சுமி நராயண அய்யர் வீட்டில் அறை எடுத்து நான் தங்கத் தொடங்கியது 1967 ஆம் ஆண்டு வாக்கில் என்று நினைக்கிறேன். இவர் வழக்குரைஞர் திரு.உடையப்பாவிடம் எழுத்தராகப் பணி புரிந்து வந்தார். இவர் மனைவி பெயர் திருமதி.கோமதி என்று நினைக்கிறேன்அய்யர் கோமு என்று அழைப்பார். மூத்த மகன் பெயர் திரு.சிவராமன் () இராமு. அடுத்தவர் திரு.சந்திரமௌளி. ஜயா என்று கூப்பிடுவார்கள். அடுத்தவர் திரு.நடராசன். இவருக்கு அடுத்ததாக புவனேசுவரி என்ற பெண் குழந்தை !

புவனேசுவரிக்கு அடுத்துப் பிறந்தவர் ஒரு ஆண் பிள்ளை. குமார் (எ) முத்துக்குமார்  ! இவர் சற்றேறக் குறைய பத்து அகவை இருக்கும் போது நீரில் மூழ்கி இறந்து போனார். கடைக்குட்டி, உமா (எ) மகாலட்சுமி. நான்கு ஆண் மகவினரும், இரு பெண் மகவினரும் மக்கள் செல்வங்களாக அமைந்த, திரு.இலட்சுமி நாராயண அய்யர் குடும்பம், பார்ப்பனக் குடும்பமே தவிர பார்ப்பனீயம் எட்டிப் பார்க்காத குடும்பம். அய்யரும் அவர் மனைவியும் என்னை, அவர்களது தலைமகனாகவே அன்புடன் நடத்தினர் !

முகாமையான சில திருநாள்களில், என்னை அவர்கள் வீட்டில் உணவருந்த அழைப்பார்கள். இலை போட்டுச் சோறு பறிமாறி அய்யர் உள்பபடப் பிள்ளைகள் அனைவரும் என்னுடன் அமர்ந்து உணவருந்துவார்கள். உணவு அருந்தி முடிந்ததும், நான் உணவுண்ட எச்சில் இலையை என்னை எடுக்க விடமாட்டார்கள். அய்யரின் மனைவி தான் எடுப்பார்கள். எந்தப் பார்ப்பனக் குடும்பத்திலும் இல்லாத நயத்தக்க நாகரிகம் அக்குடும்பத்தில் நிலவியது. கள்ளிக் காட்டுக்குள்ளும் மல்லிகைப்பூ  மலரும் போலும் !

திரு.இலட்சுமி நாரயண அய்யர் வீட்டின் முன்னறையில் நான் தங்கும் வரை திரு.கிருட்டிணன் நாயர் உணவகத்தில் (HOTEL) உணவருந்தி வந்த நான், பிறகு வேறொரு அவிழகத்திற்கு (MESS) இடம் மாறினேன். இதுவும் ஒரு அய்யர் வீடு ! திரு.இராமகிருட்டிண அய்யர் வீட்டில் அவிழகம் (MESS) வைத்திருந்தனர். நான்கு பேர் மட்டுமே வாடிக்கையாளர்கள் ! நான் அவர்களுடன் ஐந்தாவதாக இணைந்தேன் . மூன்று வேளை உணவும் அங்கேயே ! வீட்டுத் தயாரிப்பு என்பதால், வயிற்றுக்குக் கேடு விளையாது இருந்தது !

திரு.இராமகிருட்டிண அய்யரின் மனைவி பெயர் திருமதி பட்டு அம்மையார். பட்டு மாமி என்பார்கள். தலைப்பிள்ளை பெயர் திரு.செல்லமணி. இரண்டாவது பெண் குழந்தை செல்வி.பிரேமா. மூன்றாவது பிள்ளை திரு.சீனிவாசன். நான்காவது பிள்ளை திரு.இராசா. ஐந்தாவது பிள்ளை திரு.தியாகராசன். இந்தக் குடும்பமும் பார்ப்பனீயம் வேர்விடாத நாகரிகக் குடும்பம் ! பொதுவாகவே, புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் பார்ப்பனீயத்தை அவ்வளவாக விரும்பாதவர்கள் என்றே சொல்லலாம் !


----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,மேழம்(சித்திரை)20]
{03-05-2020}
----------------------------------------------------------------------------------------------
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், 
புதுக்கோட்டை.
இந்த எந்திரத்தின் பெயர்
 வடிப்பம் (SHAPER)  எந்திரப் பணியியல்
 பிரிவில் உள்ள  சில வகை எந்திரங்களில்
 இதுவும் ஒன்று !
 எந்திரப் பணியியல் பிரிவில்
 1967 -ஆம் ஆண்டு சேர்ந்து பயின்ற
திரு.அ.சீனிவாசன்.

புதுக்கோட்டை
 திரு.இலட்சுமி நாராயண அய்யரின்
 பிள்ளைகள் . (இடமிருந்து வலம்) 
திரு.நடராசன், திரு. சிவராமன்,
 (அமர்ந்திருப்பது) புவனேசுவரி,
 சிவராமன் கையில் இருப்பது
 உமா (எ) மகாலட்சுமி !   
 (1970 -ஆம் ஆண்டு எடுத்த படம்) 

திருமதி. கல்யாணி - திரு.க.இராமமூர்த்தி
(திருமணம் 
நடைபெற்ற ஆண்டு 1968)






.






                      


No comments:

Post a Comment