name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (05) :1954 நிகழ்வுகள் - பள்ளிப் படிப்பு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, March 28, 2020

காலச் சுவடுகள் (05) :1954 நிகழ்வுகள் - பள்ளிப் படிப்பு !


                தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1954 நிகழ்வுகள் ! 

 (சுவடு.05) பள்ளிப் படிப்பு !

----------------------------------------------------------------------------------------------

தொடக்கக்  கல்வி நிறைவு பெற்று, உயர்நிலைப் பள்ளியில் சேர வேண்டிய நேரம். 1954 –ஆம் ஆண்டு சூன் மாதம் ஆயக்காரன்புலம் இரா. நடேசதேவர் நினைவு அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். கடிநெல்வயலிலிருந்து திரு.சி.மகேசுவரன், திரு.கு.தியாகராசன், திரு.தா.தம்புசாமி, திரு.சி.தேசபந்து, திரு..வேம்பையன் ஆகியோரும் இதே பள்ளியில் சேர்ந்திருந்தனர் !

எனது முன்மை  (SENIOR) மாணாக்கர்கள் திரு.கோ.தனசாமி, திரு.கோ.பரமசிவம், திரு.நா.அரங்கசாமி ஆகியோர் இதே பள்ளியில் மேல் வகுப்புகளில் படித்து வந்ததால், வீட்டிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவு நடந்து சென்று படிப்பது எனக்கு அச்சமாகவும் இல்லை; அத்துணைக் கடினமானதாகவும் தோன்றவில்லை !

ஆறாம் வகுப்பில் பிரிவு 2 –இல் (B.Section) நான் இடம் பெற்றேன். கடிநெல்வயலைச் சேர்ந்த பிற மாணவர்கள் வேறு பிரிவுகளில் இடம் பெற்றிருந்தனர். ஆயக்காரன்புலம் திரு.சுப்புத் தேவர் மகன் திரு.நடராசன், திரு.சோமுத் தேவர் மகன் திரு.வைரப்பன், திரு.அப்பாக்குட்டித் தேவர் மகன் திரு.நடராசன் கைகாட்டியடி திரு.சோமுத்தேவர் மகன் திரு.பக்கிரிசாமி ஆகியோர் என் வகுப்புத் தோழர்கள்

திரு.சுப்புத் தேவரின் முதல் மகன் (நி/வா) திரு.குப்புசாமியும் எங்களுடன் பள்ளிக்கு வருவார். அவர் எனக்கு முன்மையரா (SENIOR) அல்லது என் வகுப்புத் தோழரா என்பது நினைவில்லை. சனிச் சந்தையடி நாராயணச் செட்டியாரின் மகன் பாலசுப்ரமணியனும் என் வகுப்புத் தோழரே ! திரு.தாயுமான தேவரின் இரு மகன்களும் பள்ளிக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். என்னைவிட அகவையில் இளையவர்கள். அவர்கள் எந்தப் பள்ளியில் படித்தார்கள் என்பது நினைவில்லை !

கருப்பம்புலத்தில் வாழ்ந்து வந்த திரு.நாகராசன் (ஐயர்) எனக்கு வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப் பாடமும், சமூகப் பாடமும் சொல்லிக் கொடுப்பார். கற்பித்தலில் மிகவும் வல்லவர். மாணவர்கள்  அரைக்காற் சட்டை தான் அணிந்து வரவேண்டும் என்பது பள்ளியில் வகுத்திருந்த விதி. ஆனால் என் வகுப்புத் தோழர் திரு.சோ. வைரப்பன்  வேட்டி அணிந்து வருவார். இதற்காக அவர்  ஆசிரியர் நாகராசனிடம் பிரம்படி வாங்காத நாளே இல்லை !

நல்லான் குத்தகை திரு.அ,நடராசன் என்ற மாணவருக்கு அகவை அதிகம். ஆகையால், முக மழிப்பு அவருக்குத் தேவையாயிற்று.  சில நேரங்களில் மழிக்காத முகத்துடன் வகுப்புக்கு வரும் அவரை ஆசிரியர் நாகராசன் பிரம்பால் பின்னி எடுத்து விடுவார் !

தன் ஊரில் விளையும் பிரம்புச் செடியிலிருந்து வாகான குச்சிகள் சிலவற்றை அவ்வப்போது கொண்டு வந்து ஆசிரியர் திரு.நாகராசனிடம் தரும் கடமையை கரியாப்பட்டணம் திரு.வைரவமூர்த்தி என்ற மாணவர் ஏற்றிருந்தார்.  அதில் அவருக்குப் பெருமை வேறு !

திரு.வைரவமூர்த்தியை மற்ற மாணவர்களுக்குப் பிடிக்காது போனமைக்கு இதுவே முதன்மைக் காரணம். செண்பகராயநல்லூர்  திரு.அரங்கசாமி, ஆயக்காரன்புலம் 2 –ஆம் சேத்தி திரு.வீ.தருமலிங்கம், திரு.பா.திருநாவுக்கரசு ஆகியோரும் அப்போது என்னுடன் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவர்கள் !

காலையில் பள்ளி தொடங்கும் போது, மாணவர்கள்  பள்ளி வளாகத்தில் அணிவகுத்து நிற்பார்கள். விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர் திரு.பி.எசு.சகநாதன்  அவர்களை வழிநடத்துவார் !

வாய்மேடு திரு.மு.இராமசாமி என்பவர் எனக்கு முன்மையர் (SENIOR). காதுகளில் வெள்ளைக்கல் கடுக்கன் அணிந்திருப்பார். அவர் தான் அன்றாடம் இறைவணக்கம் பாடுவார். ”ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்என்னும் பாரதியாரின் பாடலை இசைகூட்டிப் பாடுவார். அவரது இனிய குரலில் மயங்கி மாணவர்கள் மெய்ம் மறந்து நிற்பார்கள் ! அந்த இனிய குரல் இன்றும் கூட என் காதுகளில் ஒலிப்பது போல் உணர்கிறேன் !

பஞ்சநதிக்குளம் திரு.ஞானசுந்தரம் என்பவர் என் தமிழாசிரியர் ! 1959 ஆம் ஆண்டு ஆயக்காரன்புலம் பள்ளியை விட்டு வெளியேறிய நான், அதன் பிறகு 39 ஆண்டுகள் கழித்து அவரை 1998 ஆம் ஆண்டு ஓசூரில் அவரது மகன் திரு.நெடுஞ்செழியன் வீட்டில் சந்திக்க நேர்ந்ததுமறக்கவியலாத  இனிய நிகழ்வு ! வாழ்க்கையில் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் எத்துணை எத்துணை இனிய நிகழ்வுகள்இனிய நினைவுகள் !   

வகுப்பு ஆசிரியராக இருந்த திரு.நாகராசன் (ஐயர்), அடுத்த ஓராண்டில் ஏனங்குடிப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்று விட்டார். நானும் படிப்பு நிமித்தமும், பணியின் நிமித்தமும் எங்கெங்கோ சென்றுவிட்டு 1984 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக மேலாளராகப் (OFFICE MANAGER) பணியேற்றிருந்தேன். அச்சமயத்தில் அங்கு பணியில் இருந்த திரு.சுவாமிநாதன் என்னும் இளநிலை உதவியாளர் ஒருவர் மஞ்சள் காமாலையினால் இறந்து போனார் !

இறந்து போன அந்த அலுவலர் அன்னிலையாகப் (தற்காலிகமாக) பணிபுரிந்து வந்தவர். அவர்  குடும்பத்திற்கு அரசிடமிருந்து பண உதவி எதுவும் கிடைக்குமா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு பெரியவர் என்னை வந்துச் சந்தித்தார் !

அவர் முகத்தைப் பார்த்ததும், அவரை எங்கோ பார்த்ததாக ஒரு நினைவு என்னுள் மின்னல் வெட்டாகத் தோன்றி மறைந்தது. அவரிடம் பொதுவாகச் சில நிமிடங்கள் பேசிவிட்டு, “உங்கள் பெயர் என்ன அய்யா ?” என்று கேட்டேன். “நாகராசன்என்றார் !

எனக்குப் புரிந்து விட்டது !
ஐயா நீங்கள் ஆசிரியராகப் பணி புரிந்தவரா ?” என்று கேட்டேன்.
ஆமாம் !”
ஆயக்காரன் புலம் உயர்நிலைப் பளியில் பணி புரிந்திருக்கிறீர்களா ?”
ஆமாம் !”
எனக்கு உறுதியாகி விட்டது !
ஐயா !  29 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களைப் பார்க்கிறேன். நான் உங்கள் மேனாள் மாணவன் !  கடிநெல்வயல் ஆசிரியர்  திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களின் தம்பி !” என்றேன் !
என் இருக்கைக்கு முன்னால் அமர்ந்திருந்த அவர் எழுந்து என் கரங்களைப் பற்றிக் கொண்டு இன்பக் கண்ணீர் வடித்தார் !

இறந்து போன சுவாமிநாதன் என் தமக்கை மகன். அவன் அன்னிலைப் பணியில் (TEMPORARY JOB)  இருந்தமையால் அவன் குடும்பத்திற்கு அரசு உதவி ஏதும் கிடைக்குமா என்பதைக் கேட்டு அறிந்து கொள்ளவே இங்கு வந்தேன். நீங்கள் யார் என்பதை நான் அறிந்த பிறகு எனக்கு அழுத்தமான நம்பிக்கை வந்திருக்கிறது. அவன் பெற்றோர் ஏழ்மையில் வாடுகின்றனர். அவன் குடும்பத்திற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்என்று கண்ணீர் மல்கக் கூறினார் !

அலுவலகத்தில் உரிய அலுவலரை அழைத்து, திரு.சுவாமிநாதனின் பணி விவரங்களைக் கேட்டறிந்தேன். பின்பு திரு.நாகராசன் அவர்களிடம் கூறினேன், “ஐயா, திரு.சுவாமிநாதன் ஒரு மாதம் முன்பு இறந்திருந்தால், அரசிடமிருந்துப் பண உதவி எதுவும் கிடைத்திருக்காது !

கடந்த வாரம் தான் இறந்திருப்பதால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியமும் வேறு சில பணப் பயன்களும் உறுதியாகக் கிடைக்கும். அவற்றைப் பெற்றுத் தருவது என் பொறுப்பு ! எனக்குக்  கல்வி  கற்பித்த  ஆசிரியருக்கு நான் செலுத்தும் நன்றிக் காணிக்கையாக இதைக் கருதுங்கள் ! ” என்று கூறியனுப்பினேன் !

சொல்லியபடியே ஒரே மாதத்தில் குடும்ப ஓய்வூதியம் உள்பட அனைத்துப் பணப் பயன்களையும் பெற்றுத் தந்தேன் ! என் அறிவுக் கண்களைத் திறந்து வைத்த   ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன நான் செய்துவிட முடியும் ?

--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),11]
 {24-04-2020}
----------------------------------------------------------------------------------------------
நான் படித்த ஆயக்காரன்புலம் பள்ளி




பிரம்புச் செடி









                          



No comments:

Post a Comment