தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1958 நிகழ்வுகள் !
(சுவடு.09) கடக்கொம்பு !
பத்தாம் வகுப்பில் நுழைந்தாகி
விட்டது.
படிப்பில் இன்னும் முன்னேற்றம் காண்பிக்க வேண்டுமே என்னும் கவலையும்
தொற்றிக் கொண்டது. நான் படித்த காலத்தில் ஆசிரியர்கள் தம் வீட்டில்
தனி வகுப்பு (TUITION CLASS) எடுக்கும் வழக்கமெல்லாம் கிடையாது.
வீட்டில் மண்ணெண்ணெய்
விளக்கு தான். மின்சார வசதி அப்பொழுது
(1958 ஆம் ஆண்டு) கடிநெல்வயலை எட்டிப் பார்க்காத
நேரம் !
இரவு
9-00 மணிக்கெல்லாம் உறங்கப் போய்விடுவேன். விடியற் காலையில்
4-00 மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்குவேன். 6-00 மணி வரைப் படிப்பு. 6-00 மணி முதல் 8-30 மணி வரை புகையிலைக் கொல்லையில் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பணி. 6
–ஆம் வகுப்பில் படிக்கும் போதிலிருந்தே இந்தப் பணி தொடங்கிவிட்டது
!
புயலின் தாக்கத்தால், நெல்விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால், அதை ஈடு கட்ட,
புகையிலைக் கொல்லை உதவியது. இங்கு புகையிலைச் செடிகளுடன், மிளகாய்ச் செடிகளும் பயிரிடப்படும்.
கிணற்றுப் பாசனம் தான் !
புகையிலைச் செடி ஓரளவு
வளரும் வரைக் கிணற்றிலிருந்து குடம் மூலம் நீர் சேந்திச் செடிகளுக்கு ஊற்றுவோம். அரையடி
உயரத்திற்கு வளர்ந்த பிறகு பாத்திக் கட்டி, வாய்க்கால்
அமைத்து, ஏற்றம் மூலம் நீர் பாய்ச்சுவோம் !
என் தந்தை ஏற்றத்தில் (துலை ஏற்றம்) நின்று
இயங்குவார். தாயார், ஏற்றத்துடன் இணைத்த
மூங்கில் கழியின் கீழ் முனையில் பிணைத்துள்ள ஏற்றப் பெட்டி மூலம் கிணற்றிலிருந்து நீர்
இறைப்பார். வாய்க்காலில் ஓடிவரும் நீரினை நான் பாத்திகளுக்குத்
திருப்பிவிடுவேன் !
சில நேரங்களில் ஏற்றத்தில்
நின்று இயங்கும் பணியில் நானும் ஈடுபடுவேன் ! இப்பணிகள் அல்லாமல் வயலில் ஏர் உழுதல், களை எடுத்தல், நாற்று
நடுதல், கதிர் அறுத்தல், மாடு கட்டி வைக்கோல்
அடித்தல் போன்ற வேளாண் பணிகளிலும் எனக்குப் பழக்கமும் ஈடுபாடும் இருந்தது !
பெரும்பாலும் காலை
8-30 மணி வரை புகையிலைக் கொல்லைக்குத் தண்ணீர் பாய்ச்சும் பணித்
தொடரும். அதன்பிறகு நான் ஓடிச் சென்று குளத்தில்
குளித்து விட்டு, காலை உணவை உண்டு, புத்தகப்
பையுடன் பள்ளிக்குப் புறப்பட 8-50 மணி ஆகிவிடும் !
9-30 மணிக்குத்
தொடங்கும் வகுப்புக்கு, நாற்பது நிமிட நேரத்தில் நான் சென்றாக வேண்டும்.
ஐந்து கி.மீ தொலைவை நாற்பது நிமிட நேரத்தில் ஓடிக் கடந்து
பள்ளிக்குச் செல்வது எனக்குப் பழகிப் போயிற்று. இந்த ஓட்டம் தான்
இன்று வரை எனக்கு நீரிழிவோ, உயர் குருதி அழுத்தமோ இல்லாமல் நலத்துடன்
வாழ உதவி இருக்கிறது என்பது என் எண்ணம் !
ஆயக்காரன் புலம் 3 ஆம் சேத்தியைச் சேர்ந்த மலையான் குத்தகை என்ற இடம் எனது பள்ளியிலிருந்து குறுக்கு
வழியில் 2 கி.மீ தொலைவில் இருக்கிறது.
அங்கு எனக்கு தூரத்து உறவாகத் தாத்தா பாட்டி இருந்தனர். நான் குறிப்பிடும் இந்தக் காலக் கட்டத்தில் தாத்தா திரு. முத்துக்குமார தேவர் காலமாகிவிட்டார் !
பாட்டியும் அவர்களது பிள்ளைகளான
மாமன்மார் திரு. தருமலிங்கம், திரு. கணேசன், திரு. தாயுமானவன், திரு. வரதராசன்,
திரு. இராதா கிருட்டிணன், திரு. சதாசிவம் ஆகியோர் அங்கு வசித்து வந்தனர். இன்னொரு மகனான
திரு. அப்பாதுரை என்பவர் பெருக வாழ்ந்தான் பக்கமுள்ள பெருவிடமருதூரில்
வாழ்ந்து வந்தார் !
இவர்களுள் கடைக்குட்டியான
திரு.சதாசிவம் என்பவர் என்னைவிட ஓரகவை (ஒரு வயது) இளையவர் (JUNIOR). திரு.வரதராசன்
என்னைவிட மூன்று ஆண்டுகள் முன்மையர் (SENIOR). மலையான் குத்தகைப்
பாட்டியும் என் தாயாரும் கலந்து பேசிக் கொண்ட ஏற்பாட்டின் படி, பத்தாம் வகுப்பில் நான் படித்த ஏறத்தாழ பத்து மாதக் காலமும் மலையான் குத்தகையில்
தான் நண்பகல் உணவு அருந்தி
வந்தேன் !
உணவு இடைவேளையில், நானும், திரு.சதாசிவமும்,
திரு.மணிவாசகம் என்பவரும் குறுக்கு வழியில் மலையான்
குத்தகை வந்து உணவு அருந்திவிட்டுப் பள்ளிக்குத் திரும்புவோம் !
மலையான் குத்தகையிலிருந்து
நடேசனார் நினைவு உயர்நிலைப் பள்ளிக்கு வந்து என்னுடன் படித்துவந்த இன்னொரு நண்பர் திரு.அழகுசுந்தரம். வேறு மாணாக்கர்கள் பெயர் எதுவும் இப்போது நினைவில் இல்லை. அதுபோன்றே, பத்தாம் வகுப்பில் எனக்குப் பாடம் சொல்லிக்
கொடுத்த பிற ஆசிரியர்களில் தமிழாசிரியர் பன்னாள் திரு.கு.இராமநாதன், ஆங்கிலப்பாடம் எடுத்த் திரு.கே.ஆர்.கோவிந்தன் தவிர வேறு யாருடைய பெயரும் நினைவில் இல்லை !
வீட்டிலிருந்து கையில்
எடுத்து வரும் மதிய உணவை அருந்தி விட்டு, உணவு இடைவேளை
நேரத்தில் கவடி விளையாடுதல் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் வரை, எனக்கு ஒரு தொடர் நிகழ்வானது. நான் அப்போது கவடியில் கைதேர்ந்து
விளங்கினேன். குறிப்பாக, பாடிவரும் வீரரைப்
பிடித்து வீழ்த்துவதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டேன் !
கவடு (தந்திரம்) என்னும் சொல்லில் இருந்து உருவானது ”கவடி”. கவடமுடன் விளையாடும் ஆட்டம் “கவடி”. இதைக் ”கபடி” என்று இந்திச் சொல்லாக்குவது தமிழர்கள் செய்யும் பிழை !
கவடு (தந்திரம்) என்னும் சொல்லில் இருந்து உருவானது ”கவடி”. கவடமுடன் விளையாடும் ஆட்டம் “கவடி”. இதைக் ”கபடி” என்று இந்திச் சொல்லாக்குவது தமிழர்கள் செய்யும் பிழை !
கவடி அல்லாமல் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல் ஆகிவற்றிலும் சிறந்து விளங்கினேன் ! வேறு எந்த விளையாட்டிலும் எனக்கு அத்துணை ஈடுபாடு அப்போது இருந்ததில்லை
!
பள்ளிக்குச் செல்லும் வழியில்
இரண்டு கோயில்கள் இருந்தன. ”அந்தாளி மாரியம்மன் கோயில்”
அவற்றுள் ஒன்று. அந்தாளி என்றால் அழகிய தாள்களை
(பாதங்களை) உடைய மாரியம்மன் என்று பொருள்.
இன்னொன்று சிங்கங் குத்தகை என்னும் இடத்திலிருந்த “முனியன் கோயில்” !
முனியன் கோயில் திருவிழா
பார்ப்பதற்கு மனத் துள்ளல் தருவதாக இருக்கும். பள்ளியில் எனக்கு
ஓராண்டு முன்மையரான (SENIOR) திரு.கோவிந்தசாமி என்பவருடைய தந்தையார்
திரு.சிவலிங்கக் கவுண்டர், கொப்பறைச் சட்டி
எடுத்துக் கொண்டு குதிரைச் சிலை மீது அமர்ந்து ஆடும் ஆட்டமும், அரட்டலும், உருட்டலும் கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்
!
மழைக் காலத்தில் மேலக்
கடக்கொம்பைக் (WESTERN PASSAGE CAUSE TO CROSS) கடந்து தான்
நாங்கள் பள்ளிக்குச் சென்றாக வேண்டும்
இந்த இடத்தில்
சற்றேறக் குறைய ஐம்பது அடி அகலத்தில் சாயும்புலம் ஏரி குறுகலாக இருக்கும். இதில் நான்கடி ஆழத்திற்கு நீர் நிற்கும்
!
வெள்ளம் ஏற்படும் காலங்களில்
இதில் ஓடும் நீரில் இழுப்பு (WATER CURRENT) அதிகமாக இருக்கும். ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் கிணற்றில்
விழுந்து மீண்ட பிறகு, நீச்சல் கற்றுக் கொண்டேன். அப்போது கற்றுக் கொண்ட நீச்சல் மேலக் கடக் கொம்பைக் (WESTERN
PASSAGE CAUSE TO CROSS) கடப்பதற்கு எனக்குப் பயன்பட்டது !
பள்ளிக்குச் செல்கையில்
கடிநெல்வயலிலிருந்து செல்லும் ஒவ்வொரு மாணவனின் புத்தகப் பையிலும் கோவணம் (MAN’S
LOIN-CLOTH) ஒன்று இருக்கும். (மாணவிகள் யாரும் அப்போது ஆயக்காரன்புலத்தில்
படிக்க வில்லை) மேலக் கடக் கொம்பை அடைந்ததும், கோவணத்தைக் கட்டிக் கொண்டு, ஆடைகளைக் களைந்து,
பைக்குள் வைத்துக் கொண்டு, புத்தகப் பையைத் தலைக்கு
மேல் தூக்கிக் கொண்டு நீரைக் கடந்து செல்வோம் !
அக்கரைக்குச் சென்றதும்
ஆடைகளை மாற்றிக் கொண்டு கோவணத்தைக் களைந்து அங்குள்ள தாழை வேலி மீது விரித்து உலரப்
போட்டுவிடுவோம். மாலை பள்ளி விட்டுத் திரும்பும் போதும் இக்கரையில்
கோவணத்தை அணிவதும் அக்கரைக்குச்
சென்றதும் களைந்து வேலியில்
காயப் போடுவதும் தொடர்கதையாக நிகழும் ! ஆறாம் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்புப் படிக்கும்வரை இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. இத்தகைய இயற்கை இடையூறுகளை
எல்லாம் எதிர்கொண்டு படித்ததால் தானோ என்னவோ படிப்பிலும் நான் முன்னிலையில் நின்றேன்
!
அக்காலத்திய பள்ளி வாழ்க்கை
படிப்புடன் பல்வேறு துய்ப்புகளையும் (அனுபவங்களையும்)
கற்றுத் தந்தது. இயற்கை இடையூறுகளை எதிர்கொள்ளும்
ஆற்றலை வளர்த்துக் கொள்ள உதவியது !
இக்காலத்திய பள்ளி வாழ்க்கை, வீட்டு வாயிலுக்கே பள்ளி ஊர்தி வந்து பற்றிச் செல்லும் வாய்ப்புகளை வாரி வழங்கி,
இயற்கையை எதிர்கொள்ளும் திறனற்றவர்களாக மாணவர்களை உருவாக்கித் தருகிறது
! உடல் வலுவும் மன வலுவும் குறைவான ஒரு குமுகாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது
!
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),15]
{28-04-2020}
----------------------------------------------------------------------------------------------
கடக்கொம்பு !
ஏற்றம் மூலம் நீர் இறைத்தல்
முனியன் கோயில்
No comments:
Post a Comment