name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (38) : 1998-1999 நிகழ்வுகள் - ஒகனேக்கல் உலா!

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, March 31, 2020

காலச் சுவடுகள் (38) : 1998-1999 நிகழ்வுகள் - ஒகனேக்கல் உலா!


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1998-1999 நிகழ்வுகள் !

(சுவடு.38) ஒகனேக்கல் உலா!

---------------------------------------------------------------------------------------------
1998 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புது தில்லியில் ஆட்சி அமைத்த வாஜ்பாய் அரசுக்கு, அ.இ.அ.தி.மு.க தனது ஆதரவைத் திரும்பப் பெற்றதால் 13 மாதங்களிலேயே ஆட்சி கவிழ்ந்தது. இதனை அடுத்து 1999 செப்டம்பரில் நடந்த தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி  270 இடங்களில் வென்று மீண்டும் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது !

அரசியல் களம் இவ்வாறு மாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கையில், நான் என் உறவு வகையில் சில திருமண நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.  எனது கடைசி மைத்துனர் திரு.செந்தில் குமார் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார் ! மணிப்பூர், திரிபுரா, பஞ்சாப், சம்மு - காசுமீர், என்று வடக்கு, கிழக்கு எல்லைகளில் அவர் பணியாற்றாத இடமே இல்லை !

அவருக்கும் அகத்தியன்பள்ளி திரு.ஜி.நடராசதேவர் மகள் செல்விபொன்மணிக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டது. இத்திருமணம் 1998 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் வேதாரணியம் சொஸ்திக் திருமண மண்டகத்தில் நடைபெற்றது. ஓசூரிலிருந்து வேதாரணியம் 444 கி,மீ தொலைவில் உள்ளது. எனினும் கடைசி மைத்துனர் திருமணம் அல்லவா ! ஓசூரிலிருந்து நான் குடும்பத்தினருடன் திருமணத்திற்குச் சென்றிருந்தேன் !

திருமணத்திற்குப் பின் சிலநாள் சென்று மணமக்கள் ஓசூர் வந்திருந்தனர். ஓசூரில் இராயக் கோட்டை சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடிருப்பில் பி.12 இலக்கமுள்ள வீட்டில் அப்போது நான் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தேன். ஓசூர் நகரத்தை புதுமண இணையர்   வலம் வந்து  பெரிய பெரிய தொழிலகங்கள் அமைந்துள்ள இடங்களை எல்லாம் கண்டுகளித்தனர் !

பிறகு, ஒருநாள் ஒகனேக்கல் அருவிக்குப் புதுமண இணையரை அழைத்துச் சென்றேன்.  திரைப் படங்களில் மட்டுமே பார்த்திருந்த ஒகனேக்கல் அருவியை நேரில் காண்கையில் எந்தவொரு மனிதனும் மலைத்துப் போவது இயல்பு. அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் உருக்கிய பளிங்கு போன்ற நீரும், நீரினால் உண்டாகும் சுழல்களும், சுழல்களில் பம்பரம் போல் சுழன்றாடும் பரிசல்களும், அதைத் திறமையாகக் கையாளும் பரிசல் ஓட்டிகளும், அனைத்துமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மயிர்க் கூச்செறிய வைக்கும் மறக்கமுடியாத துய்ப்புகள் என்பதில் ஐயமே இல்லை ! வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் ஏதாவதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒரேயொரு முறையாவது ஒகனேக்கல் அருவியைக் கண்டு களிக்க வேண்டும் ! 

ஒரு நாள் ஏதோவொரு வேலையின் நிமித்தம் சேலம் சென்றிருந்தோம். அப்போது, என் மகள் கவிக்குயிலுக்கு, ஒரு மோதிரமும், ஒரு சிறு பதக்கமும் (டாலர்) சேலத்தில் உள்ள கோயமுத்தூர் நகை மாளிகையில் 17-07-1998 அன்று வாங்கினோம். அப்பொழுது ஒரு பவுன் விலை உருபா 4200/- ஆகும். இன்று (31-03-2020) ஒரு பவுன் விலை உருபா 33,600. விலைவாசி தான் எத்துணை விரைவாக ஏறுகிறது !

1998 -ஆம் ஆண்டு சூன் மாதத்தில் ஒருநாள், நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டு ஓசூர் ஏ.எஸ்.டி.சி.அட்கோ என்னும் குடியிருப்புப் பகுதியில், என்னுடைய “யமகா” உந்தூர்தியில்  வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.  என் வண்டிக்கு 50 அடி முன்னதாக ஒரு பெரியவர் கையில் ஒரு உடைப் பேழையுடன்  நடந்து சென்று கொண்டிருந்தார். வெயில் நேரம். அவரை வண்டியில் அழைத்துச் செல்லலாம் என்று கருதி, அவர் அருகில் வண்டியை விட்டேன் !

அவர் முந்திக் கொண்டு, “நானும் வரலாமா ?” என்று என்னிடம் கேட்டார். “சரி ! வாருங்கள்” என்று கூறி வண்டியின் பின் இருக்கையில் அவரை ஏற்றிக் கொண்டேன். வண்டியில் செல்கையில் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவரைப் பற்றி உசாவினேன் !

“என் பெயர் செல்வராஜ்; அதியமான் பொறியியற் கல்லூரி அலுவலகத்தில் ஆட்சி அலுவலராக இருக்கிறேன். முன்னதாக, நான் தமிழக அரசில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். ஓய்வுக்குப் பிறகு திரு.தம்பிதுரை அவர்களின் அழைப்பின் பேரில்  அதியமானில் பணியாற்றி வருகிறேன்”

“உங்கள் சொந்த ஊர் எது அய்யா “
”நான் பிறந்தது கோவை, சூலூரில்; திருமணம் செய்தது தஞ்சாவூரில்”
”தஞ்சாவூரில் எங்கு அய்யா ?”
”தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகில்”
“அய்யா ! நானும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் தான். திருத்துறைப் பூண்டி அருகில் என்றால் எந்த ஊர் ?”
“திருத்துறைப்பூண்டி அருகில் வேதாரணியம் பக்கத்தில் ஒரு சிற்றூர்”
“அப்படியா ! மிக நெருங்கி வந்து விட்டீர்கள் ! வேதாரணியம் பக்கத்தில் எந்த ஊர் ?”
“கடிநெல்வயல்”
“கடிநெல்வயலா ? அய்யா ! நான் பிறந்ததும் அந்த ஊர் தான் ! ”கடிநெல்வயலில் யார் வீட்டு மாப்பிள்ளை நீங்கள் ?”
“கடிநெல்வயல் நடுக்காட்டில் வாழ்ந்து வந்த திரு தனசாமிப் பிள்ளையின் மகளைத் தான் நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அவரைத் தெரியுமா ?“

“நன்றாகத் தெரியும். நான் கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்தவன். ஆகையால் அவரை நன்றாகத் தெரியும். கடிநெல்வயலின் முதல் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.இரத்தினசாமிப் பிள்ளையில் தம்பி. சரிதானா ?”

“மிக்க மகிழ்ச்சி ! நான் கடிநெல்வயலின் மாப்பிள்ளை. நீங்கள் கடிநெல்வயலின் பிள்ளை ! என்ன வியப்பு ! நாம் இருவரும் கடிநெல்வயலிலிருந்து  440 கி.மீ தொலைவில் உள்ள ஓசூரில் முதன்முதலாகச் சந்திக்கிறோம். வாழ்க்கையில் இது போன்ற அரிதான நிகழ்வுகள் எப்போதாவது  தான் நடக்கின்றன. இந்த அரிய சந்திப்பை நான் என்னவென்று சொல்வது ? நினைக்க நினைக்க வியப்பாகத் தான் இருக்கிறது. மறக்கமுடியாத சந்திப்பு ! 

”ஆமாம் ! உண்மை தான் ! “

”சரி ! நான் இங்கு இறங்கிக் கொள்கிறேன். அதியமான் வந்தால் என்னைச் சந்தியுங்கள். மிக்க மகிழ்ச்சி ! சென்று வருகிறேன் !” 

அதன்பிறகு அலுவலகப் பணி தொடர்பாக, அவருக்கு ஐயம் ஏற்பட்டாலோ அல்லது அரசாணை எதுவும் தேவைப்பட்டாலோ என்னுடன்  தொலைபேசி மூலம்  பேசுவார். ஒரு அலுவலரை அனுப்பி அரசாணையின் படியைப் பெற்றுக் கொள்வார். கல்லூரி தொடர்பாக எனக்குத் தேவைகள் எதுவும் இருந்தால், நானும் அவருடன் தொடர்பு கொள்வேன். எங்கள் நட்பு நான் அங்கு பணியில் இருக்கும் வரைத் தொடர்ந்தது !

எனது ஓசூர் வாழ்க்கை இப்படிச் சென்று கொண்டிருக்க, 1999-ஆம் ஆண்டு மூன்று முகாமையான திருமணங்கள் என் உறவினர்கள்  வகையில் நடைபெற்றன. இடும்பாவனம் திரு..இராமமூர்த்தி திருமதி.கல்யாணி இணையரின் இரண்டாவது மகள் செல்விவெண்மதி, மருதவனம் திரு.எம்.பாலகிருட்டிணன் அவர்களின் மகன் திரு.சோமசுந்தரத்தை மணந்தார். திருமதி.கல்யாணி என் முதலாவது தங்கை என்பது இத்தொடரைப் படித்து வருபவர்களுக்குச் சொல்லாமலே விளங்கும் !

அதுபோன்றே  என் தங்கை மகனும் ஓசூர் பைமெட்டல் பேரிங்ஸ் “ (BI-METAL BEARINGS) தொழிலகத்தில் பணிபுரிந்து வருபவருமான  கோபு என்ற திரு.வேணுபோபால் குருவிக்கரம்பை திரு.இரா.வேலாயுத தேவர் மகள் செல்வி.இந்திராவுக்கு மாலை சூடினார். இவ்விரு திருமணங்களும் 1999 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள், திருத்துறைப் பூண்டி மங்கை மகால் திருமண அரங்கில் நடைபெற்றது !

திருமண விழாவுக்கு ஓசூரிலிருந்து நானும் என் மனைவி மக்களும் திருத்துறைப் பூண்டி சென்று கலந்துகொண்டோம்.  அப்பொழுது மைசூர் தஞ்சாவூர் விரைவு இருப்பூர்தி அன்றாடம்  இருவழியிலும் இயங்கிக் கொண்டிருந்தது. முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்ய முடிந்தது !

பின்பு இந்த வண்டி கும்பகோணம் வரையிலும் நீட்டிக்கப்பட்டு, சில காலம் இயங்கி வந்தது. திரு.மணிசங்கர் ஐயரின் தலையீட்டால், இவ்வண்டி மீண்டும் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டதால், இப்போதெல்லாம் இந்த வண்டியில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவே முடியவில்லை ! 

உறவினர்களில் சிலர் அரவணைத்துச் செல்லும் குணம் உடையவர்கள். சிலருக்கு இக்குணம் வந்து வந்து போகும். பறப்பவை எல்லாம் பறவைகள் தான். எல்லாப் பறவைகளும் ஒன்று போலவா உள்ளன ? என் இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியன் திருமதி.காஞ்சனமாலா இணையரும் இத்தன்மையரே !

அவர்களது ஒரே பிள்ளை திரு.முத்தழகன் பொறியியல் வாலை (B.E) பட்டம் பெற்றவர். அவருக்கும், நாகப்பட்டினம் திரு.எஸ்.பி.கே.குணசீலன் என்பவரின் மகள் செல்வி.புவனேசுவரிக்கும் 1999 –ஆம் ஆண்டு மே மாதம் 19 –ஆம் நாள் திருமணம் நடைபெற்றது !

எட்டுக்குடி முருகன் கோயிலில்  நடைபெற்ற இத்திருமணத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. நாங்கள் சென்று மணமக்களை வாழ்த்தும் வாய்ப்பினை அவர்கள் எங்களுக்குத் தரவில்லை. இந்த உரசலும் விலகலும் சில ஆண்டுகள் நீடித்தன. பிறகு ஊடல் தீர்ந்து ஒன்று கூடினோம். இது தான் வாழ்வின் இயல்பு !

இதுபோன்று இன்னொரு திருமணம் ! என் இரண்டாவது தங்கை கனகாம்புசத்தின் மகள் செல்வி.மகேசுவரிக்கும், விழுப்புரம் நகர், கிழக்கு சண்முகபுரம்,  இந்திரா காந்தித் தெரு, திரு..பழனித்துரையின் மகன் திரு.தமிழ்ச் செல்வனுக்கும் திருமணம் பேசப்பட்டு வந்த நிலை. மகேசுவரியின் தந்தை திரு.செல்வராசு மறைந்து எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. எனவே மகேசுவரியின் சிற்றப்பா திருபாஸ்கரன் முன்னின்று திருமணப் பேச்சுகளை மேற்கொண்டு வந்தார் !

ஓசூரிலிருந்து நானும் என் மனைவியும் திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் சென்று மணமகனைப் பார்த்துவிட்டு, அவர் குடும்ப நிலையைப் பற்றி அறிந்து கொண்டு வந்த பின்பே திருமணம் முடிவாகியது. திருமணம் 1999 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 –ஆம் நாள் நடைபெற்றது. மன்னார்குடி 3 –ஆம் தெரு அன்னபூர்ணா திருமண மண்டகத்தில்  நடைபெற்ற இத் திருமண விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டேன் !

செல்வி.மகேசுவரியின் திருமணம் என்னும் தேரை நகர்த்தி வைத்தது சிற்றப்பா திரு.பாஸ்கரன் என்றாலும், வடம்பிடித்து இழுத்து நிலைக்குக் கொண்டு வந்தது மகேசுவரியின் அண்ணன் திரு.பாலதண்டாயுதம். என் தங்கை வழிப் பெண் மக்களுக்கு, தாய்மாமா என்ற முறையில் என்னுடைய பங்களிப்பும் நகை வடிவில் இருந்தே வந்திருக்கிறது. மகேசுவரியின் திருமணத்திற்கு, பாலதண்டாயுதம் கேட்டுக் கொண்டபடி, நகைக்கு மாற்றாகப் பணமாகத் தந்துவிட்டேன் !

நம் நாட்டு வழக்கப்படித் தாய்மாமனுக்கு எனச் சில கடமைகள் இருந்து வருகின்றன. அவற்றை நானும் பின்பற்ற வேண்டிய சூழ்நிலையை என்னால் தவிர்க்க முடியவில்லை. மூன்று தங்கை மற்றும் ஒரு தமக்கையின் மகள்களுக்கு இவ்வாறு நான் செய்த சீர் என் ஆற்றலுக்கு மீறியதாகவே இருந்தது. சீர் பெற்றுக் கொண்ட பெண்கள் அனைவருமே என்னிடமிருந்து விலகியே இருந்து வருவது தான் மனதுக்குச் சற்று நெருடலாக இன்று வரை உள்ளது !

உறவு வகையில் என் வாழ்க்கை இவ்வாறு மேடு பள்ளங்களைச் சந்தித்து வந்த நிலையில், தமிழகம் மீண்டுமொரு முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதைப் பற்றி, முதல் பத்தியிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன்இந்தத் தேர்தலில் (1999 செப்டம்பர்) தமிழ்நாட்டில் திமுக, பாரதிய ஜனதா கட்சி, ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன.  தேர்தலில் இந்தக் கூட்டணி 26 இடங்களை கைப்பற்றியது !

பாரதிய சனதா கட்சி தலைமையிலான சனநாயக கூட்டணி புது தில்லியில் ஆட்சி அமைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.அரங்கராஜன் குமாரமங்கலம் (பாஜக), திரு.முரசொலி மாறன் (திமுக), திரு. டி.ஆர்.பாலு (திமுக), திரு.ஆ.இராசா( திமுக), திரு.மு.கண்ணப்பன் (ம.திமுக),  திரு.செஞ்சி இராமச்சந்திரன் (மதிமுக), திரு. என் டி.சண்முகம் (பாமக), திரு.இ.பொன்னுசாமி (பா.ம.க) ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்  !

அமைச்சர் பதவி என்பது மக்களுக்குச் சேவை செய்ய உதவும் ஒரு கருவி. அவ்வளவு தான் ! ஆனால் அரசியல்வாதிகள் அதை தங்களைப் பற்றிய மதிப்பீட்டை உயர்த்திக் கொள்வதற்கான  வாய்ப்பாகக் கையாள்கின்றனர். இதனால் தான் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் மாறுகின்றன. கொள்கை இல்லாத கட்சிகள் எல்லாம் நாட்டில் கடைவிரிக்கத் தொடங்கி விட்டன. அரசியலை கழிவு நீர்க் கால்வாய்களாக மாற்றி விட்ட இந்தக் கட்சிகள் எல்லாம் மக்களுக்குப் பணி செய்ய வந்துள்ளதாக உரக்கப் பறை சாற்றிக் கொண்டாலும், அவை நாட்டில் பிணி சேர்க்க வந்துள்ள பீடைகள் அன்றி வேறல்ல !
                            
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051,விடை (வைகாசி)14]
{27-05-2020}
---------------------------------------------------------------------------------------------
திரு.தமிழ்ச் செல்வன் -
 செல்வி.மகேசுவரி 
திருமணம் : நாள் : 15-11-1999

ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி

ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி

ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி

ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி










No comments:

Post a Comment