name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (40) :2003 நிகழ்வுகள் - கவிக்குயில் திருமணம் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, March 31, 2020

காலச் சுவடுகள் (40) :2003 நிகழ்வுகள் - கவிக்குயில் திருமணம் !தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPGY) !

காலச் சுவடுகள்: 2003 நிகழ்வுகள் !
 (சுவடு.40) கவிக்குயில் திருமணம் !

-----------------------------------------------------------------------------------------

என் கடைசித் தங்கை திருமதி.சுமதியின் மகள் செல்வி. கயல்விழிக்கும், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி திரு.இளவழகன் அவர்களின் மகன் திரு.குலோத்துங்கனுக்கும் திருமணம் உறுதியாயிற்று !

ஆயக்காரன்புலம் காசி-வீரம்மாள்  திருமண மண்டகத்தில் 2003 –ஆம் ஆண்டு சனவரி மாதம், 20 –ஆம் நாள் மணவிழா நடைபெற்றது. இத்திருமணம் நிகழ்ந்த காலை, நான் ஓசூரில் குடியிருந்து வந்தேன் !

திருமணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நான் ஓசூரில் இருந்து வந்து கலந்து கொண்டேன். செல்வி கயல்விழி திரு.குலோத்துங்கன் திருமணம் நடைபெற்ற அடுத்த 15 நாளில் என் மகள் கவிக்குயில் சிவக்குமார் திருமணமும் நடைபெற்றது ! தஞ்சாவூரில் சேவப்பநாயக்கன் ஏரி என்னும் பகுதியைச் சேர்ந்த திரு..பழனியப்பன் அவர்களின் மகன் திரு.சிவக்குமாரைக் கவிக்குயில் கைப்பிடித்தார். திரு.சிவக்குமார் அப்பொழுது ஓசூரில் உள்ள டைட்டான் கடிகார நிறுவனத்தில் (TITAN INDUSTRIES LIMITED) பணி புரிந்து வந்தார் !

கவிக்குயில் சிவக்குமார் திருமணம் 2003 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 06 –ஆம் நாள், திருத்துறைப் பூண்டி மங்கை மகாலில் நடைபெற்றது. திருமணத்திற்கு யாருக்கெல்லாம் அழைப்புத் தரவேண்டும் என்பதை மூன்று மாதம் முன்னதாகவே நான் திட்டமிட்டு வந்தேன் !

என் சட்டைப் பையில் எப்பொழுதும் ஒரு வெள்ளைத் தாளும் மணி (முனைத்) தூவலும் (BALL POINT PEN) இருந்துகொண்டே இருக்கும். நினைவுக்கு வரும்போதெல்லாம் அழைப்பிதழ் தரவேண்டியவர்களின் பெயரை அதில் எழுதி வந்தேன் ! இதனால் விடுபடலின்றி உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊரார் அனைவருக்கும் அழைப்பிதழைத் தர முடிந்தது !

திருமணம் நிறைவேறிய பிறகு, சில நாள்களில் மணமக்களுடன் ஓசூர் வந்தடைந்தோம்.  16-02-2003 அன்று ஓசூரில் சங்கீத் உரையரங்கில் (SANGEETH AUDITORIUM) வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். ஓசூரிலிருந்து திருத்துறைப்பூண்டி 416 கி.மீ தொலைவில் இருந்தமையால், ஓசூர் நண்பர்கள் அனைவரும் அங்கு வருதல் இயலாத செயல். எனவே அவர்களுக்காகவே இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன் !

ஓசூர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் அலுவலர்கள் அத்துணை பேரும் வருகை தந்திருந்தனர். அஃதன்றி, இருநூற்றுக்கும் மேற்பட்ட என் நண்பர்கள் குழாமும்  வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தது. வேலூரில் இருந்து திரு.மீ.இராசேந்திரன், பெங்களூரில் இருந்து திரு.தெ.சண்முகசுந்தரம். சேலத்தில் இருந்து திரு.சா.இராமமூர்த்தி எனப் பல்வேறு இடங்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். !

திரு.சிவக்குமாருக்கு, டைட்டான் நகரியத்தில் சொந்த வீடு இருந்தமையால், திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் அங்கு குடித்தனம் நடத்தத் தொடங்கினர். சிவக்குமார் கவிக்குயில் திருமணம் நடைபெற அடித்தளம் இட்டவர்கள், சிவகுமாரின் நண்பரும், டைட்டான் அலுவலருமான திரு.முருகேசனும் அவரது மனைவி திருமதி.அனிதாவும். இவ்விருவரும் தான் முதன்முதல் எங்கள் இல்லத்திற்கு வந்து சிவகுமாருக்காகப் பெண் கேட்டவர்கள். திரு.முருகேசன் ஆடுதுறையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி !

இதற்கிடையில் தஞ்சாவூரில் நான் வாங்கியிருந்த மனையில் வீடு கட்டுவதற்கு முயன்று வந்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த திரு.பேச்சிமுத்து என்னும் பொறியாளரை அழைத்து வீடு கட்டித்தர  04-06-2003 அன்று  ஒப்பந்தம் செய்து கொண்டேன் !

தஞ்சாவூரில் வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட நிலையில் ஓசூரிலேயே தொடர்ந்து வாழ்தல் நன்மை பயக்காது என்பதால் குடியிருப்பினைத் தஞ்சாவூருக்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்து 10-06-2003 அன்று நஞ்சுண்டேசுவரர் நகர் வீட்டினை அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்து விட்டுத் தஞ்சாவூருக்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தேன் !

முன்னதாக தஞ்சாவூர், இராசீவ் நகரில் உள்ள, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு  குருநாதன் அவர்களின் வீட்டு மாடியில் எனது குடியிருப்பை அமைத்துக் கொள்ள விரும்பி அவரிடம் பேசி இருந்தேன். வாடகையாக உருபா 1400 முடிவு செய்யப்பட்டது.  ஓசூரில் இருந்து இடம் பெயர்ந்தவுடன், குடும்பத்தினரை அழைத்து வந்து இந்த வீட்டில் தங்க வைப்பது எனக்கு எளிதாயிற்று !

இராசீவ் நகர், வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு அருகில் இருந்த கண்ணம்மாள் நகரில் கட்டப்பட்டு வந்த எனது வீட்டின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு  ஒழுங்குபடுத்திக் கண்காணித்து வந்தேன் !

நாகப்பட்டினம் அருகிலுள்ள தேவூர் என்னும் ஊரில் என் தாய் மாமா திரு.சி. பண்டரிநாதன், -  தமக்கையார் திருமதி.சிந்தாமணி இணையர் வாழ்ந்து வந்தனர் அவர்களது மகன் திரு.அருமைநாதன்.  குழந்தைப் பருவத்திலிருந்து  அருமைநாதன் எங்கள் வீட்டில் வளர்ந்த பிள்ளை. என் மீதும் என் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தவர்

இவரையும் தொழிற் பயிற்சி நிலையத்தில் நல்ல தொழிற் பிரிவில் சேர்த்துப் பயிற்சி பெற வைக்க வேண்டும் என்று விரும்பினேன். தன் குடும்ப நிலையைக் காரணம் காட்டி, அவர் என் விரும்பத்தை  ஏற்கவில்லை. குறுகிய காலப் பயிற்சி உடைய வானொலி பழுது பார்ப்புப் பயிற்சியில் சேலத்தில் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னேன். சமையற் குழுவினருடன் பல ஊர்களுக்குச் சென்று பணி செய்து அதனால் ஈட்டும் வருமானத்தை நம்பித் தன் குடும்பம் இருப்பதால், இந்தக் கருத்தையும் தன்னால் ஏற்க இயலாது என்று தெரிவித்தார் !

நான் தெரிவித்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், இன்று குடும்ப வருமானத்திற்கு இன்னல்கள் பலவற்றை எதிர்கொண்டு வருகிறார். வாழ்க்கையில், சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கத் தவறுவோர், இன்னல்களிலிருந்து மீட்சி பெறுவது கடினம் என்பதற்குத்  திரு.அருமைநாதனே எடுத்துக் காட்டு !

திரு.அருமைநாதனுக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த திரு.கலிதீர்த்த தேவர் மகளும் திரு.இராசகோபால் தேவர் தங்கையுமான செல்வி.வள்ளிக்கும் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் நாள் கீழ்வேளூர் வாசன் திருமண மண்டகத்தில் திருமணம் நடைபெற்றது !

இந்தத் திருமணம் நிகழ்கையில் நான் ஓசூரிலிருந்து தஞ்சாவூருக்குக்  குடும்பத்தை அழைத்து வந்து 20 நாள் தான் ஆகி இருந்தது. தஞ்சாவூரிலிருந்து கீழ்வேளூர் 74 கிமீ தொலைவு. எனவே, திருமணத்திற்கு என் குடும்பத்தாருடன் நானும் சென்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் !

இந்தத் திருமணத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் என் திருமணம் நடந்து சரியாக 31 ஆண்டுகள் கழித்து அதே சூலை மாதம் இரண்டாம் நாளில் திரு.அருமைநாதன் செல்வி.வள்ளி திருமணமும் நிகழ்ந்திருக்கிறது.  என்னே வியப்புக்குரிய ஒற்றுமை  !

சக்கரைப் பொங்கல் சாப்பிடும்போது நாக்கைக் கடித்துக்கொண்டால் எத்துணை வலி ஏற்படும் ! அதுபோன்ற ஒரு வலியை இந்தத் திருமணம் நிகழ்ந்து  சரியாக ஏழாம் நாளில் நான் சந்திக்க நேர்ந்தது.  ஆம் ! 2003 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 -ஆம் நாள், வேதாரணியம் அருகில் உள்ள கருப்பம்புலத்தில் என் தங்கை வீட்டில் தங்கி இருந்த என் தாயார் சாரதா அம்மையார் மறைந்து போனார் !

என் பத்தாம் அகவையில், கிணற்றில் விழுந்து நான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது,  தொலைவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் அதை உதறிவிட்டு ஓடி வந்து என்னைக் காப்பாற்றிய அதே அன்னை இன்று என்னிடமிருந்து பிரிந்து மீளாத் துயிலில் ஆழ்ந்து போனார் !

வாழ்நாளெல்லாம் எனக்குத் தண்ணொளி தந்து வந்த முழு நிலவு தன் பயணத்தை முடித்துக் கொண்டு மறைந்து போயிற்று ! மறைந்த நிலாவை ஒவ்வொரு ஆண்டும் சூலை 9 ஆம் நாள் நினைவு கூர்ந்து எளியோர் சிலருக்கு உணவிடுதலை இன்று வரைக்  கடைப்பிடித்து வருகிறேன் !

என் இரண்டாவது மகள் இளவரசியின் வாழ்க்கைத் துணைவர் பெயர் திரு.பிரபு. நாங்கள் ஓசூரில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் பி.12 இலக்கமுள்ள குடியிருப்பில் வாழ்ந்து வருகையில், இதற்கு எதிர்ப்புறம் உள்ள இராசகணபதி நகரில் வாழ்ந்து வந்தவர் திரு.பிரபுவின் தந்தையார் திரு.செயராமன். ஓசூரில் சிப்காட் பகுதியில் சொந்தமாக ஒரு தொழிலகம் வைத்து இயக்கி வந்தவர் !

திரு.செயராமன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 –ஆம் நாள்  யாரும் எதிர்பரா வகையில் கதுமென (திடீரென) இறந்து போனார். அப்பொழுது எங்கள் குடும்பம் தஞ்சாவூரில் வாழ்ந்து வந்தது. திரு.பிரபு இளவரசி திருமணம் அப்போது நிகழ்ந்திருக்கவில்லை. தஞ்சாவூரிலிருந்து நான் மட்டும் ஓசூர் வந்து அவர் வீட்டிற்குச் சென்று என் இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறி வந்தேன் !

இதற்கிடையில், என் மகள் திருமதி.கவிக்குயிலுக்கு தஞ்சாவூர் ஏ.கே.எஸ். மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது. 2003 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி பிறந்த தன் பெயரனுக்கு. என் மனவி கீர்த்திவாசன்என்று பெயர் வைத்தார். கீர்த்திவாசன் நான்கு மாதக் குழந்தையாக இருந்த போது அவனுக்காக வாங்கிய தொங்கும் பிரம்பு ஊஞ்சல் இப்போதும் என் வீட்டில் இருக்கிறது !

அதில் அமர்ந்து  ஆடியபடி 16 அகவை நிறைந்த கீர்த்திவாசன் 12 –ஆம் வகுப்புப் (+2)  பாடப் புத்தகத்தைப் படிப்பதை நானும் என் மனைவியும் சற்றுத் தள்ளி அமர்ந்து மனதிற்குள் சுவைத்தபடி காலத்தை அசைபோட்டுப் பார்ப்பதுண்டு !

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள வேலூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்து வந்த சிவப்பிரகாச தேவர் கல்யாணி அம்மையார் இணையரின் மூன்றாவது மகளாகப் பிறந்தவர் என் தாயார் சாரதா அம்மையார். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஞானசேகர், வரதராசன், கருணாநிதி, பண்டரிநாதன் என்னும் ஆண் மக்களும், மீனாட்சி, சுந்தராம்பாள் என்னும் பெண் மக்களும் ஆவர் !

பள்ளிக்கே செல்லாத என் தாயார், செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் எழுத்துக் கூட்டிப் படித்துப் படித்து, பிற்காலத்தில் தங்கு தடையின்றிப் படிக்கும் அளவுக்கு மிகுந்த திறமைசாலியாக விளங்கினார். தமக்கை மகன் திரு.அருமைநாதன், தங்கை மகன் திரு.வேணுபோபால் ஆகியோர் இளம்பருவத்தில் என் தாயாரின் அரவணைப்பில் எங்கள் வீட்டில் வளர்ந்தவர்கள் என்பது உற்றாரும் உறவினர்களும் அறிந்த உண்மை !


------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),16]
{29-05-2020}
------------------------------------------------------------------------------------------

திரு.சிவகுமார் - செல்வி கவிக்குயில்
திருமணம் : நாள் ; 06-02-2003


திரு.சிவகுமார் - செல்வி கவிக்குயில் 
திருமண அழைப்பிதழ். 
இவர்கள் திருமணம் 
 6-2-2003 அன்று 
திருத்துறைப் பூண்டி மங்கை மகால் 
திருமண அரங்கில் நடைபெற்றது.

திரு.அருமைநாதன் - செல்வி.வள்ளி
 திருமணம் : நாள் : 02-07-2003

திரு.அருமைநாதன்  செல்வி வள்ளி 
இணையர் திருமணம் 
2-7-2003 அன்று  கீழ்வேளூர் 
வாசன் திருமண மண்டகத்தில் 
நடைபெற்றது.

திரு.குலோத்துங்கன் - 
செல்வி கயல்விழி திருமண அழைப்பிதழ். 
இவர்கள் திருமணம் 
 20-01-2003 அன்று ஆயக்காரன்புலம் 
காசி வீரம்மாள் திருமண மண்டகத்தில் 
நடைபெற்றது.

அன்னை சாரதாம்பாள், 
தோற்றம் 00-00-1911 :  மறைவு:09-07-2003


திரு.ஜெயராமன்: 
மறைவு 22-8-2003
No comments:

Post a Comment