name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (36) :1997-1998 நிகழ்வுகள் - முத்திரை பதிப்பு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, March 31, 2020

காலச் சுவடுகள் (36) :1997-1998 நிகழ்வுகள் - முத்திரை பதிப்பு !




தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு. வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் :1997-98 நிகழ்வுகள் !

(சுவடு.36) முத்திரை பதிப்பு !

---------------------------------------------------------------------------------------------

ஆட்சி அலுவலருக்கென்று சில நிதி அதிகாரங்கள் அரசினால் வழங்கப் பட்டிருகின்றன.  அரசு நிதி ஒதுக்கீட்டிலிருந்து பணம் எடுப்பு மற்றும் கொடுப்பு அலுவலராக (DRAWING AND DISBURSING OFFICER) ஆட்சி அலுவலர் செயல்படுகிறார். இஃதன்றி, வைப்புநிதி முன் பணம், பயண முன்பணம், பண்டிகை முன்பணம் ஒப்பளிப்பு,  ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு போன்ற பல்வேறு அதிகாரங்களும்  ஆட்சி அலுவலருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன !

என் பணிக்காலத்தில் ஐந்து கொள்கைகளை நான் கடைப்பிடித்து வந்தேன். (01) மாணவர்களைத் தவிர அவர்களின் பெற்றோர், உள்பட வேறு யார் என்னைப் பார்க்க வந்தாலும், அவர்களை அமர வைத்தே பேசுவேன். நின்று கொண்டு பேச இசைவளிப்பதில்லை. (02) கல்விச் சான்று, மதிப்பெண் பட்டியல், தேர்வு விண்ணப்பம், வேலைக்கான விண்ணப்பம் போன்றவற்றில் சான்றொப்பம் (ATTESTATION) நாடி யார் வந்தாலும், எத்தனை பேர் வந்திருந்தாலும், அவர்களை அழைத்து உடனடியாகக் கையொப்பமிட்டு அனுப்பி வைத்திடுவேன் !

(03) ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு, ஓய்வூதியம், பணிக்கொடை தவிர்த்து பிற பணப் பயன்கள் அனைத்தையும் அவர்கள் பணி ஓய்வு பெறும் நாளிலேயே வழங்கிடச் செய்தல் ! (04) எத்துணை வேலைகள் இருந்தாலும் அலுவலர்களின் நலன் சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்தல். (05) என்னென்ன உதவிகளை என்னால் மற்றவர்களுக்கு செய்ய முடியுமோ, அத்துணை உதவிகளையும் கைம்மாறு கருதாது செய்து கொடுத்தல் !

என் தூவலில் (PEN) பச்சை மை நிரப்பிக் கையொப்பமிட அரசு எனக்களித்த வாய்ப்பு நான் இந்தப் பதவியில் இருக்கும் வரைச் செல்லுபடியாகும். ஆட்சி அலுவலராகப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு எனக்கு அந்த உரிமை கிடையாது; ஆட்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்த உரிமையை இழந்து விடுகிறேன் !

இந்தப்பதவியில் இருக்கும் வரையில் மட்டுமே சான்றொப்பமிடும் (ATTESTATION) உரிமை எனக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல மனங்களின் வாழ்த்துதல்களைப் பெற்றிட வேண்டும் என்று எண்ணினேன்; செயல்படுத்தினேன் ! என் நான்கரை ஆண்டுப் பணிக் காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சான்றொப்பங்களை இட்டுத் தந்திருக்கிறேன். இதில் நான் பெற்ற மன நிறைவுக்கு ஈடு இணையே  இல்லை ! 

ஓசூரில் நான் ஆட்சி அலுவலராகப் பொறுப்பேற்ற காலத்தில் திரு.அப்துல் அமீது அவர்கள் முதல்வராக இருந்தார். சேலம் திரு.கோ.புருஷோத்தமன், பேளுக்குறிச்சி திரு.சு. நடராசன், சென்னை திரு.ஆர்.நடராசன்  ஆகியோர் வெவ்வேறு சமயங்களில் அலுவலக மேலாளர் பொறுப்பில் இருந்திருக்கின்றனர் !

வேலூர் திரு.சதாசிவம், சென்னை திருமதி.லலிதா, பாலக்கோடு திரு.கோ.பஞ்சநதம், சென்னை திருமதி ஆர்.செயம், ஓசூர் திருமதி.ஆர்.வசந்தா, ஆகியோர் உதவியாளர்களாகப் பணி புரிந்து வந்தனர் !

மல்லசமுத்திரம், திரு.பி.கதிர்வேல் கணக்கர். ஓசூர், திரு.எஸ்இரவிச்சந்திரன் பண்டகக் காப்பாளர். திருமதி.வகிதா ரகுமான், திருமதி.தேவி ஆகியோர் இளநிலை உதவியாளர்கள். திருமதி.சுகுணா என்பவர் தட்டச்சராக இருந்தார் !

திரு.மல்லையா, திரு.வின்செண்ட் ஆகியோர் அலுவலக உதவியாளர்கள். திரு.பி.பர்வதலிங்கம், திரு.என்.கைலாசம், திரு.எஸ்.மாதவன் ஆகியோர் பயிற்சி அலுவலர்கள் !

பயிற்றுவிப்புப் பணியில் இருந்தவர்களில் என் நினைவில் நிற்போர் திருவாளர்கள் அ.அப்பாவு, .பாலசுப்ரமணியன் (MOULDER), வே.இளஞ்செழியன் (WIREMAN), எஸ்,சுகுமாரன், எம்.இரவி (M.M.V), .நமசிவாயம் (DRAWING), ஆர்.இராமலிங்கம் (FITTER), கலைவாணி (D.P.C.O) டி.அர்ச்சுனன், சுப்ரமணியன் (T.D.M) எஸ்.செல்வராஜ் (H.S Cum P.T.O) முதலியோர் !

ஓசூர் நிலைய வளாகத்திலேயே அமைந்துள்ள சார்புரை மைய அலுவலகத்தில் (RELATED INSTRUCTION CENTER) உதவி இயக்குநராக திரு.எஸ்.இரவிச்சந்திரன் அவர்கள் பொறுப்பிலிருந்தார். பிற்காலத்தில் இவர் இணை இயக்குநராகப் பதவி வகித்தது வரை தெரியும். இப்பொழுது அவர் பதவியில் இருக்கிறாரா அல்லது ஓய்வு பெற்று விட்டாரா என்பது தெரியவில்லை !

நான் தொகுத்து வைத்திருந்த அரசாணைப் புத்தகங்கள் அனைத்தையும் இவரிடம் தான் நான் அளித்துப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி இருந்தேன் !

எனது பணிக்காலத்தில் நான் செய்த முகாமையான இரண்டு பணிகள் (1 முதல்வர் அறையில் சற்று நீண்டு அகன்றிருந்த ஒரு சுவரில் ஈர்மப்பூச்சு (PAINTING) செய்து, அதில், ஓசூர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கென அரசால் ஒப்பளிக்கப் பெற்ற நிலைப் பணியிடங்கள் (POSTS PERMANENTLY RETAINED), அன்னிலைப் பணியிடங்கள் (POSTS SANCTIONED TEMPORARILY) ஆண்டுதோறும் நீட்டிப்புச் செய்யும் பணியிடங்கள் (POSTS BEING CONTINUED EVERY YEAR) ஆகிய விவரங்களை, உரிய அரசாணை எண்களுடன் ஈர்மக் கலைஞரைக் கொண்டு எழுதி வைத்திருந்தேன் ! 

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற வாரம் (2020) அங்கு செல்கையில் அதைப் பார்த்து மகிழ்ந்தேன். அதன் வரலாற்றை அறிந்த இப்போதைய அலுவலர்களும், அஃது எவ்வாறு தங்களுக்கு அடிக்கடிப் பயன்படுகிறது என்பதைச் சொல்லி மகிழ்ந்து எனக்கு நன்றி தெரிவித்தனர் !.

இன்னொரு  முகாமையான பணி ! நான் அமர்ந்திருந்த ஆட்சி அலுவலர் அறையில் எனக்கு எதிர்ப்புறச் சுவரில், ஒவ்வொரு கணக்குத் தலைப்பையும் ஈர்மம் (PAINT) கொண்டு எழுதி வைத்திருந்தேன் !

அதில் பாதீட்டில் பெறப்பட்ட  நிதி (BUDGET ALLOCATION), திருத்திய பாதீட்டில் ஒதுக்கப் பெற்ற நிதி (FUND ALLOCATION IN REVISED ESTIMATE), செலவான தொகை (EXPENDITURE INCURRED), எஞ்சியிருக்கும்  தொகை (BALANCE AMOUNT AVAILABLE) ஆகியவற்றை சுண்ணக் காம்பினால் (CHALK PIECE) அவ்வப்போது எழுதிட இடம் விட்டிருந்தேன் !

அரசு ஒதுக்கீடு செய்யும்  நிதியின் வரவு செலவைக்  கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு அலுவலர் என்பதால், ஆட்சி அலுவலருக்கு  இந்த விவரங்கள் ஒவ்வொரு நாளும் இற்றைப்படுத்தித் (UPDATION) தெரிந்திருக்க வேண்டும் !

அதற்காக இதை எழுதி வைத்திருந்தேன். இது போன்ற ஒரு ஏற்பாடு எந்த அலுவலகத்திலும் பின்பற்றப் படுவதில்லை ! சுருங்கச் சொன்னால், ஓசூர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  ஆட்சி அலுவலராக  எனது முத்திரையைப் பதித்து வந்திருக்கிறேன் என்றால் அது மிகையாகாது !

நான்கரை ஆண்டுகள் ஆட்சி அலுவலராக ஓசூரில் நான் பணியாற்றினேன். நான் செய்திருந்த இந்த ஏற்பாடுகள் அலுவலகப் பணியாளர்களின் அன்றாடப் பணிகளுக்கும் மிகவும் பயன் பட்டது. நான் சேர்த்து வைத்திருந்த 15,000 அரசாணைகளும், பணியமைப்பு மற்றும் கணக்குப்பிரிவு அலுவலர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன. ஒசூர் பயிற்சி நிலைய வரலாற்றின் இந்த நான்கரை ஆண்டுகளும் ஒரு பொற்காலம் என்று பல அலுவலர்களும், நான் ஓய்வு பெற்ற பிறகும் சொல்லக் கேட்டிருக்கிறேன் !

சேலம் தியாகராயர் பல்தொழிற் பயிலகத்தில் படித்து வந்த என் மகன் இளம்பரிதி, கணினிப் பயன்பாட்டியல் பட்டயப் படிப்பின் இறுதி ஆறு மாதங்கள் ஏதாவதொரு தொழிலகத்தில் களப் பயிற்சியில் ஈடுபட்டாக வேண்டும். ஓசூர் பயிற்சி நிலைய முதல்வர் திரு.அப்துல் அமீது அவர்களின் முயற்சியின் பேரில் இளம்பரிதி, ஓசூரில் உள்ளடைட்டான் வாச்சஸ்நிறுவனத்தில் 02-06-1997 அன்று களப் பயிற்சியில் (IN-PLANT TRAINING) சேர்ந்தார் !

களப்பயிற்சி முடிந்த பின்பு உருபா 1500 உதவித் தொகை கொடுத்து, மேலும் ஆறு மாதங்கள் அங்கேயே இருத்திக் கொண்டனர். இந்தக்காலக் கட்டத்தில் நான், ஓசூரில் இராயக்கோட்டை சாலையில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் பி.12 இலக்கமுள்ள வீட்டுக்குக் குடி வந்திருந்தேன் !

தனது பட்டயப் படிப்பை முடித்த பிறகு, சென்னை, தரமணியில் உள்ள பழகுநர் பயிசிக்கான மைய  அலுவலகத்தில், என் மகள் கவிக்குயில் தனது பெயரைப் பதிவு செய்துகொள்ள உதவிப் பயிற்சி அலுவலர் திரு.டி.அர்ச்சுனன் உதவினார். இரண்டாவது மகள் இளவரசியை ஓசூரில் உள்ள பெண்கள் மேனிலைப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 -ஆம் வகுப்பில் சேர்த்திருந்தேன் !

மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் பழகுநர் பயிற்சியில் (APPRENTICESHIP TRAINING) சேரத் தரமணி அலுவலகத்திலிருந்து கவிக்குயிலுக்கு உத்தரவு வந்தது. மேட்டூரில் என் தூரத்து உறவினரான பொறியாளர் திரு.வி.மதியழகன் பணிபுரிந்து வந்தார். அவர் வீட்டில் தங்கிக் கொண்டு 16-09-1997 முதல்  பழகுநர் பயிற்சியை கவிக்குயில் மேற்கொண்டிருந்தார்.  இதற்கிடையில், மேட்டூரிலிருந்து ஓசூருக்குப் பழகுநர் பயிற்சியை மாற்றிக் கொள்ள,  அங்கு பணிபுரிந்து வந்த மின்வாரிய அலுவலர் சங்கப் பொறுப்பாளர் ஒருவர் உதவி செய்தார் !

இதனால், மேட்டூரிலிருந்து 04-02-1998 அன்று விடுவிப்புப்பெற்று, ஓசூரில் தளி சாலையில் உள்ள  230 கே.விதுணை மின் நிலையத்தில் 11-02-1998 அன்று  பயிற்சியில் சேர்ந்தார். இந்தப் பயிற்சி 15-09-1998 அன்று நிறைவு பெற்றது !

ஓசூர் மின் வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்த திரு.கிருபானந்தன் அவர்களின் உதவியால் கவிக்குயில் ஓசூர் சிப்காட்-2 –இல் இருந்த “TI-GOLD COATINGS” என்னும் சிறு  தொழிலகத்தில் மாதம் உருபா 2500 ஊதியத்தில் 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் பணியில் சேர்ந்தார் !

----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),12]
{25-05-2020}
---------------------------------------------------------------------------------------------
ஆட்சி அலுவலர் இருக்கையில் !

230 KV. துணை மின் நிலையம், 
தளி சாலை, ஓசூர்

டைட்டான் 
கடிகார வனைவுத் தொழிற்சாலை


ஓசூரிலிருந்து
 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள 
தொரப்பள்ளி என்னும் ஊரில் உள்ள 
இராசகோபாலாச்சாரியார் (இராஜாஜி) 
பிறந்த வீடு
 ஓசூர் அருகில் உள்ள 
சானமாவு காப்புக் காடு. 
இங்கு யானைகள் நடமாட்டம் மிகுதி.







No comments:

Post a Comment