name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (18) :1971-1972 நிகழ்வுகள் - மாலை சூடிய மணநாள் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (18) :1971-1972 நிகழ்வுகள் - மாலை சூடிய மணநாள் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள்  எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1971-1972 நிகழ்வுகள் 

                            (சுவடு.17) மாலை சூடிய மணநாள் !

----------------------------------------------------------------------------------------------

வேறு நிலையத்திற்கு இடமாற்றல் பெற, இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, முனைப்பாக முயன்றேன். பல முயற்சிகளுக்குப் பிறகு அரசின் செயலாளர் அளவிலான ஒரு அதிகாரியை அணுகி, அவரிடம் எனக்கு உதவ வேண்டினேன். என் பின்னணி அனைத்தையும் கேட்டறிந்த அவர்,  வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் !

இயக்குநர், செயலாளரிடம் சொல்ல மறுமொழி இது தான் ! “புதுக்கோட்டை நிலையப் பண்டகத்தை இவர் போற்றத் தகுந்த வகையில் செவ்வையாகப் பேணி வருகிறார். திருவெறும்பூர் நிலையப் பண்டகம் முறையாகப் பேணப்பட வில்லை. குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது. அதைச் சீர்திருத்திக் கொண்டு வர இவர் தான் மிகப் பொருத்தமான ஆள். இப்போது இருப்பதில் இவரை விட்டால் வேறு திறமையான ஆள் கிடையாது. அதனால் தான் இவரை அங்கு மாற்றி இருக்கிறேன் “ !

செயலாளர் என்னிடம், இயக்குநர் சொன்னதை அப்படியே சொல்லி, ”உங்கள் மீது இயக்குநர் நல்ல கருத்துக் கொண்டிருக்கிறார். அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். திருவெறும்பூர் சென்று பணியாற்றுங்கள். தேவைப்பட்டால் அடுத்த ஆண்டு, நீங்கள் விரும்பும் இடத்திற்கு  மாற்றல் வாங்கித் தருகிறேன்” ! அவ்வளவு தான் ! செயலாளருக்கு நன்றி சொல்லிவிட்டு, திருவெறும்பூருக்கு வந்து 01-11-1972 அன்று  பணி ஏற்றுக் கொண்டேன் !

திருவெறும்பூர் தொழிற்பயிற்சி நிலையப் பண்டகத்தில் கருவிகளும் இதர பொருள்களும் தேவைக்கு மேல் குவிந்திருந்தன ! எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று தெரியாத வகையில் ஒழுங்கின்மை நிலவியது. அனைத்துப் பொருள்களையும்  சரி பார்த்துப் பெற்றுக் கொள்வதற்கே எனக்கு இரண்டரை மாதங்கள் ஆகின !

சுவர்மாடம் (WALL RACK) ஒவ்வொன்றுக்கும் இலக்கம் (NUMBER) தந்து வண்ணக் கட்டியால் குறியீடு செய்தேன். பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் போதே அவற்றுக்குத் தனித்தனி இடம் ஒதுக்கி இக்காலத்தியப் பேரங்காடிகள் (SUPER MARKETS) போல மாற்றி அமைக்கலானேன்.  எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பதைச் சுட்டும் வகையில் சுவர்மாடத் தட்டுகளின் (WALL RACK PLATES)  இலக்கத்தினை பதிவேடுகளில் அதற்குரிய பக்கத்தில் குறிப்பெழுதி வைத்தேன். இப்பணிகளை எல்லாம் அவ்வப்போதே செய்ய வேண்டி இருந்ததால் எனக்கு இத்துணை நாள்கள் தேவைப்பட்டன !

நான் திருவெறும்பூரில் பணியேற்றக் காலத்தில் (1971) திரு.சீதாபதி என்பவர் அந்நிலைய முதல்வராக இருந்தார். திரு..விநாயகராவ் ஆட்சி அலுவலர். திரு..பம்பையன் அலுவலக மேலாளர்.  திருவாளர்கள் ஆர்.பத்மநாபன். வாளாடி திரு.செயராமன், பனையபுரம் திரு..பாலசுப்ரமணியன், திருச்சி, திரு.ஆர்.இராம்கோபால், திரு..கணேசன், தஞ்சாவூர் திரு.அப்துல் அலிம், திருவானைக்கா திரு.சந்தானகிருட்டிணன், மதுரை திரு..செல்வராசு, கணக்கர் திரு.வி.வெங்கடேசன் மற்றும் பலர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர். பண்டகத்தில் என் உதவியாளராக கூத்தாநல்லூர் திரு.இராமலிங்கம் பணிபுரிந்து வந்தார் !

பண்டகப் பொறுப்புகளை முழுமையாக ஏற்றபின்பு, பண்டகம் பேணுவதிலும், கணக்குகளைப் பேணுவதிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தேன். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பதை நொடியில் தெரிந்து கொள்ள குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்தினேன். என்னைத் தவிர வேறு யாரும் எந்தப் பொருளையும் தொடாத வகையில், வாயிலருகே என் இருக்கையை அமைத்துக்கொண்டு, முப்புறமும் சுற்றடைப்பை ஏற்படுத்திக்கொண்டேன். தொடக்கத்தில், என் செயல்கள் பலருக்கும் மனக் குறையை ஏற்படுத்தினாலும், போகப் போக என் செயல்பாடுகளைப் பாராட்டத் தொடங்கினர். பண்டகம் என்றால் இப்படித்தான் பேண வேண்டும் என்று அனைத்து உயர் அலுவலர்களும் சொல்லுமளவுக்கு, நிரம்பவும் மாற்றங்களைக் கொண்டு வந்தேன் !

திருவெறும்பூரில் பணியில் சேர்ந்தவுடன், நண்பர் மதுரை செல்வராசு அவர்களின் உதவியால், திருவெறும்பூர் இருப்பூர்தி மேம்பாலம் அருகே இருந்த கட்டடத்தில் எனக்குத் தங்குவதற்கு  இடம் கிடைத்தது. பாரத மிகுமின் தொழிலக  ஊழியர் திரு.அப்துல் காதர் என்பவருடன் 18 –ஆம் எண் அறையில் தங்கிக் கொண்டேன். 01-11-1971 –இல் தொடங்கிய வாடகை அறை வாழ்வு, 02-07-1972 –இல் திருமணமாகும் வரை நீடித்தது; இங்குதான் எனது இருப்பு !

அப்பொழுது திருவெறும்பூரில்தஞ்சாவூர் பர்மனெண்ட் பேங்க்என்று தனியார் அளகையின்  (BANK) கிளை ஒன்று இயங்கி வந்தது. அதில் காசாளராக, திருத்துறைப்பூண்டி வித்வான் மானைக்காலைச் சேர்ந்த திரு.கனகசுந்தர தேவரின் மகன் திரு.சிவராமன் என்பவர்  பணிபுரிந்து வந்தார் !

தற்செயலாக அவரைப் பார்த்து அறிமுகமானபின் அங்கு சேமக் கணக்கு (SAVINGS BANK ACCOUNT) ஒன்று தொடங்கினேன். ”தஞ்சாவூர் பர்மனெண்ட் பேங்க்என்னும் இந்த அளகை, பிற்காலத்தில் இந்தியர் அளகையுடன் (INDIAN BANK) இணைக்கப்பட்டுவிட்டது. 1972 ஆம் ஆண்டு இந்த அளகையில் நான் தொடங்கிய சேமக் கணக்கு 48 ஆண்டுகளாக தொடர்ந்து இயக்கத்தில் இருந்து வருவதை இங்கு குறிப்பிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன் !

திருவெறும்பூர் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நான் பணிபுரிந்து வருகையில், 1972 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 2 –ஆம் நாள் எனது    28 –ஆம் அகவையில் எனக்குத் திருமணமாயிற்று. மன்னார்குடி அருகில் உள்ள சேரன்குளம் என்னும் ஊரைச் சேர்ந்த திரு.இரகுநாத பிள்ளை என்னும் பொதுவுடைமைக் கட்சித் தலைவரின் இரண்டாவது மகளாகிய செல்வி.கலாநிதி என்பவர் என் வாழ்க்கைத் துணையானார் !

திரு.இரகுநாத பிள்ளையின் மூத்த பெண் திருமதி.காஞ்சனமாலாவும், மாப்பிள்ளை திரு..மா.சுப்ரமணியனும் 1972 ஆம் ஆண்டு வாக்கில் திருத்துறைப் பூண்டி வட்டம் இடும்பாவனம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தனர். திரு..மா.சுப்ரமணியன் இடும்பாவனம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் !

இடும்பாவனத்தில் என் தங்கை திருமதி.கல்யாணியும், அவர் கணவர் ஆசிரியர், திரு. . இராமமூர்த்தியும் வாழ்ந்து வந்தமையால், நான் அவர்கள் வீட்டிற்குச் செல்வது வழக்கம். இவ்வாறு நான் சென்றிருந்த போது, தற்செயலாகக் திருமதி.காஞ்சனமாலாவும் திரு.சுப்ரமணியனும் என்னைப் பார்த்திருக்கின்றனர். நான் யார் என்பது பற்றியும், நான் அரசுப் பணியில் இருப்பது பற்றியும் அறிந்துகொண்ட திருமதி.காஞ்சானமாலா, அவரது தந்தையிடம் சொல்லி, கலைச்செல்வியுடனான எனது திருமணத்திற்குக் கால்கோள் இட்டார் !

பின் இருவீட்டாரும் கலந்து பேசி திருமதி.காஞ்சனமாலாவின் தங்கை செல்வி. கலாநிதியை எனக்கும், என் தங்கை செல்வி. கனகாம்புசத்தை திருமதி.காஞ்சனமாலாவின் அண்ணன் திரு.செல்வராசுக்கும் திருமணம் செய்விக்கலாம் என்று பேசி முடிவு செய்து திருமணத்தை உறுதி செய்தனர் !

திருமண அழைப்பிதழில் கலாநிதி என்னும் பெயரை கலைச் செல்வி என்று  மாற்றி அமைத்துக் கொண்டேன்.  இவ்வாறு வேதரெத்தினம் கலாநிதி, கனகாம்புசம்  செல்வராசு திருமணங்கள் 1972 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் நாள் இனிது நிகழ்வுற்றன !

எனது திருமண அழைப்பிதழை நேரிசை ஆசிரியப்பா வடிவில் அமைத்திருந்தேன். ஏறத்தாழ 48 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு பாடல் வடிவில் திருமண அழைப்பிதழ் வழங்கப்பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது; புதுமையாகப் பார்க்கப்பட்டது !


பெருந்தகை     வள்ளுவர்        பெயரால்          நிகழும்,
 ஈரா                     யிரத்துமூன்    றென்றுரை     யாண்டில்,
 ஆனித்               திங்கள்             ஆனபத்             தொன்பது,
 ஞாயிறு             காலை               நற்கதிர்            தோன்றி,
 ஐயிரு                 நாழிகை           அளவில்            செல்வி,
 கலைச்செல்   விதனைக்         கைத்தலம்      பற்றி
 வாழ்க்கைத்    துணையாய்    வரித்திட         உள்ளேன் !
 ஆன்றவிந்        தடங்கிய           அருமைச்        சான்றீர் !
  மனங்கவர்     நண்பீர் !              மகளீர் !           கிளையீர் !
  அன்புடன்       எனதிவ்                வழைப்பினை   ஏற்றுச்
  சீர்மணம்         நிகழும்               சேரன்              குளமாம்
  ஊரகம்             வருக !                  உறுமெய்       யன்பால்
  இல்லறம்         ஏற்றிடும்             எமக்கு
  நல்லறம்          காட்டி                   நல்வாழ்த்       தருள்கவே !


இதுதான் எனது மணவிழா மடல் ! இந்தியப் பொதுவுடைமைக் கட்சிச்  சட்டமன்ற உறுப்பிராக  இருந்த  மன்னை திரு.மு.அம்பிகாபதி  தலைமையில் திருமணம் நிகழ்ந்தது. ஐயர் இல்லை; மந்திரம் இல்லை; பிற சடங்குகளும் இல்லை. முற்றிலும் சீர்திருத்த முறையில் நடைபெற்ற திருமணம் !

திருமணத்திற்கு, திருச்சி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து அலுவலக நண்பர்கள் தஞ்சை திரு.அப்துல் அலிம், திருச்சி திரு.சந்தானகிருட்டிணன், பனையபுரம் திரு.பாலசுப்ரமணியன், வாளாடி திரு.செயராமன், தஞ்சை திரு.தருமராசன், திருச்சி திரு.இராம்கோபால் மற்றும் பலர் வந்திருந்தனர். பணிமணை நண்பர்கள் தில்லைவிளாகம் திரு.பழனிவேலு, கூத்தாநல்லூர் திரு.இராமலிங்கம் ஆகியோரும் வந்திருந்தனர் !

புதுக்கோட்டையில் இருந்து திரு. இலட்சுமி நாராண அய்யர், திரு. இராம கிருட்டிண அய்யர் இருவரும் வந்திருந்தனர். திருவெறும்பூர் அறைத் தோழர் திரு.அப்துல் காதர் வந்திருந்தார். வேறு யாரெல்லாம் வந்திருந்தனர் என்பது இப்போது நினைவுக்கு வரவில்லை !

திருமணத்திற்காக 1972 ,சூன் 19 முதல் 1972, சூலை 12 வரை 24 நாள்கள் ஈட்டிய விடுப்புக் கோரியிருந்தேன். அப்போது மயிலாடுதுறை திரு.என்.சி.கணேசன் பயிற்சி நிலைய முதல்வராக இருந்தார். விடுப்பில் செல்வதற்கு முன்னதாக அனைத்துத் தொழிற்பிரிவு அலுவலர்களுக்கும் செய்தி தெரிவித்து, பயிற்சிக்குத் தேவையான பொருள்களை முன்னதாகவே   பெற்றுக் கொள்ளச் செய்திருந்தேன் !

இருந்தாலும், முதல்வர் திரு.என்.சி.கணேசன் என்னிடம் தவிர்க்கவியலா நேர்வு ஏதும் ஏற்பட்டால் பண்டகத்தைத் திறந்து பொருள் எடுக்க  வேண்டியிருக்கும் என்பதால் திறவுகோல்களைத் தன்னிடம் தந்து செல்லுமாறுக் கேட்டுக் கொண்டார். நான் மறுத்துவிட்டேன். அவ்வாறு மறுக்க எனக்கு உரிமையுண்டு என்பது என் கொள்கை !

அவரது  பணிக்காலத்தில், அவர் பேச்சை மறுத்த ஒரே கீழ்நிலை அலுவலர் நான்தான் என்பதை வருத்தத்துடன் சொல்லி,  இருந்தாலும்,  விதிப்படி நான் செயல்படுவதில் காட்டிய உறுதியைப் பாராட்டுவதாகச் சொல்லியது,  மறக்கவியலாத நிகழ்வு !

திருமணத்திற்குப் பிறகு, திருவெறும்பூர் இருப்பூர்தி நிலையத்திற்கு (RAILWAY STATION) எதிரில் புதிதாகக் கட்டப் பெற்றிருந்த ஜலால் வளவில்” (JALAL COLONY), இருந்த   ஆறு வீடுகளில் ஒன்றை மாதம் உருபா 65 வாடகைக்கு அமர்த்திக் கொண்டேன். 1972 –ஆம் ஆண்டு சூலை மாதம் 15 –ஆம் நாள் முதல் இங்கு எனது இல்லற வாழ்வு தொடங்கியது !

மனைவி, தங்கை, அம்மா அனைவரையும் அழைத்து வந்து இங்கு என் புதிய  வாழ்வைத் தொடங்கினேன். அலுவலக நண்பர்களுக்கு ஒரு நாள் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அலுவலக மேலாளர் தென்காசி திரு.எஸ்.எம். முகையதீன், திரு.இராம்கோபால், கூத்தாநலூர் திரு.இராமலிங்கம் ஆகியோர்  இதில் கலந்து கொண்டனர் ! வேறு யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்பது இப்போது நினைவில்லை !

புதுக்கோட்டையிலிருந்து சென்னைத் தலைமயகத்திற்கு இடமாற்றலில் சென்றிருந்த வல்லம் திரு.சு.அரங்கராசுலு, ஆட்சி அலுவலராகப் (GAZETTED ASSISTANT) பதவி உயர்வு பெற்று 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருவெறும்பூருக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார் ! ஒரு பணியாளர் அமைப்பை (EStABLISHMENT)  எவ்வாறு கையாள்வது என்னும் கலையில் வல்லவரான இவரிடமிருந்து நான் நிரம்பவும் கற்றுக் கொண்டிருக்கிறேன் !

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொழிற்பயிற்சி நிலையமாக அப்போது திகழ்ந்தவை அம்பத்தூர் மற்றும் திருவெறும்பூர் பயிற்சி நிலையங்கள். பயிற்சியாளர்கள் எண்ணிக்கை  இந்நிலையங்களில் ஆயிரத்துக்கும் அதிகம். தொழிற் பயிற்சி அளிக்கும் அலுவலர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். இப்படிப்பட்ட பெரிய நிலையமான திருவெறும்பூரில், பொருள்கள் கொள்முதல், இருப்பு வைப்பு, வழங்கல் ஆகிய பணிகளை நான் மிகத் திறமையுடன் கையாண்டதாக மாநில அளவில் எனக்கு நல்ல பெயர் ஏற்பட்டிருந்தது !

திருவெறும்பூர், தொழிற்பயிசி நிலையத்திற்கு இயக்குநர், இணை இயக்குநர் உள்பட உயர் அலுவலர்கள் யார் வருகை தந்தாலும், அவர்களைச் சந்தித்து, பண்டகத்திற்கு வந்து ஆய்வு செய்யுங்கள் என்று அழைப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். பண்டகத்தை மிகவும் செவ்வையாகவும் முறையாகவும் பேணி வந்ததால், எனக்கு என்மேலேயே அத்துணை நம்பிக்கை. சில நேரங்களில் வருவார்கள், சில நேரங்களில் நீ தான் நன்றாக வைத்திருப்பாயே ! அடுத்த முறை வருகிறேன்  என்று சொல்வதுண்டு !

இங்கு நான் பணிபுரிந்த மூன்றரை ஆண்டு காலத்தில் திரு.ஆர்.சீத்தாபதி, திரு.என்.சி.கணேசன், திரு.ஜி.ஆர்.இராமமூர்த்தி, திரு.என்.ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் முதல்வர்களாகப் பணியாற்றி இருக்கிறார்கள். ஆட்சி அலுவலர்களாக (P.A./ G.A./ A.O) திரு..விநாயக்ராவ்,  திரு..பாலசுப்ர மணியன்,  திரு. சு,அரங்கராசுலு ஆகியோர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள் !

இந்நிலையத்தில், பொருத்தியல் (FITTER), கடைசலியல்  (TURNER), எந்திரப் பணியியல்  (MACHINIST),  சாணை பிடிப்பியல் (MACHINIST - GRINDER).  மின்வினையியல்  (ELECTRICIAN),  உந்தூர்திக் கம்மியவியல்  (MECHANIC – MOTOR VEHICLE),  ஒருக்கியல்  (WELDER),  தீசல் கம்மியவியல்  (MECHANIC - DIESEL),  வார்ப்பியல்  (MOULDER),  கரு வடிப்பியல்  (PATTERN MAKER)  மின்  இணைப்பியல்  (WIREMAN)  போன்று மொத்தம் 16 தொழிற் பிரிவுகள் அப்போது இருந்தன !

தொழிற் பயிற்சிப் பொறுப்பு அலுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்போது திருவெறும்பூரில் பணி புரிந்து வந்திருக்கின்றனர் என்றாலும்  ஒரு சிலரை மட்டுமாவது இங்கு குறிப்பிடுதல் இவ்வரலாற்றுக் குறிப்புக்குச் சுவை சேர்க்கும் என்று கருதுகிறேன். தலைமைப் பயிற்சி அலுவலர்களான   திருவாளர்கள்    எம்.பெரியண்ணன்,    எஸ்.கந்தசாமி, 
பி..குமார்டி.ஆர்வெங்கட்ட ரங்கன்,  எஸ்,வி .சுப்ரமணியன் ஜி.குருமூர்த்தி, ஆகியோர்  இருந்தது நினைவுக்கு வருகிறது !

பயிற்றுநர்களாக திருவாளர்கள் ஜனார்த்தனன்,  இராமலிங்கம்,  ஜான்,  மோகன்தாஸ்,  வி.டி.ஜானகிராமன் (WELDER),  பழனிவேல்,  நிக்கோலஸ்,  நாகராஜன் (TURNER),  கௌரிசங்கர்,  இலட்சுமிபதி (MACHNIST),  சுதந்திரன் எபநேசர்,  சின்னக்கண்ணு (ELECTRICIAN), இரக்கதாஸ்,  வி.சுப்ரமணியன்,  வேணுகோபால்,  மனோகரன் (FITTER),  ஞானப்பிரகாசம் (PATTERN MAKER), ஆவுடையப்பன் (MECHANIC - MOTOR VEHICLE) ,  அப்பாவு (MOULDER), அழகர்சாமி,  சிவதாஸ் (MACHNIST – GRINDER)  ஆகியோர் பணிபுரிந்து வந்தனர் !

திருவெறும்பூர், பாரத மிகுமின் நிறுவனத்தில் (B.H.E.L) என் பெரிய மாமனாரின் மகன் திரு.சவகர்லால் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள கைலாசபுரத்தில் அமைந்திருக்கும் மிகுமின் நிறுவன அலுவலர் குடியிருப்பில் அவர் வாழ்ந்து வந்தார் !

அவர் வீட்டிற்கு நானும் என் மனைவியும் மாதம் ஒருமுறையாவது சென்று வருவது வழக்கம். ஒருமுறை, ஆயுத பூசை நாளன்று மிகுமின் தொழிலகத்தின் உள்ளே எங்களை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். ஆயுத பூசை நாளன்று பொதுமக்களை இவ்வாறு தொழிலகத்தினுள்  பார்வையிட அனுமதிப்பது வழக்கம். எத்துணைப் பெரிய தொழிலகம் ! மலைத்துப் போனேன் !

திரு.சவகர்லாலின் நண்பர், திரு.குப்புசாமி என்பவர் தனது தம்பியை, திருவெறும்பூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்க விரும்பினார். அவர் திரு.சவர்கர்லாலை அணுக, திரு.சவகர்லால் என்னை அணுக, முதல்வர் திரு.என்.ஆர்.சுப்ரமணியன் அவர்களிடம் சொல்லி அந்த இளைஞருக்குப் பொருத்தியல் பிரிவில் இடம் கிடைக்கச் செய்தேன் ! அடுத்தவருக்கு நாம் உதவினால், நமக்குத் தேவைப் படுகையில்,  தானாகவே உதவி கிட்டும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம்(சித்திரை),24]
{07-05-2020}


----------------------------------------------------------------------------------------------
திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

திரு.வேதரெத்தினம் - 
செல்வி.கலைச் செல்வி 
திருமணம் : 
நாள்: 02-07-1972

திரு.செல்வராசு -
செல்வி.கனகாம்புசம் திருமணம் :
 நாள் : 02-07-1972

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,
 திருவெறும்பூர்.





No comments:

Post a Comment