தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1993,94 நிகழ்வுகள் !
(சுவடு.33) ஈரோடு பணிக்களரி !
சேலத்தில் அய்யந்திருமாளிகையில்
இருந்த எனது குடியிருப்பிலிருந்து விடியற்காலை 4-30 மணிக்கு,
கையில் காலை உணவையும், நண்பகல் உணவையும் ஒரு சேர
எடுத்துக் கொண்டு, எனது “சில்வர் பிளஸ்”
உந்துருளியில் புறப்படுவேன் !
ஐந்து கி.மீ தொலைவில் உள்ள சேலம் சந்திப்பு இருப்பூர்தி நிலையத்திற்கு
(RAILWAY JUNCTION) காலை 4-45 மணி அளவில் போய்ச் சேருவேன். வண்டியை அங்குள்ள ஊர்திக் காப்பகத்தில் விட்டுவிட்டு, 5-00 மணிக்கு வரும் நீலகிரி விரைவு வண்டியில் (NEELAGIRI EXPRESS) ஏறி ஈரோடு சந்திப்பு போய்ச் சேர்கையில் காலை 6-30 மணி
ஆகியிருக்கும் !
அங்கிருந்து நகரப் பேருந்தில்
ஏறி,
காசிப் பாளையத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்திற்குப் போய்ச் சேர
7-00 மணி ஆகிவிடும். என் மேசையில் வைக்கப்பட்டுள்ள
கோப்புகளைப் பார்க்கத் தொடங்குவேன். !
முந்தைய நாள் கணக்குகளை முடித்து
நிகர இருப்புக் காட்டியுள்ள கணக்கரின் பதிவேடுகளைப் பார்வையிட்டு, பதிவுகளைச் சரிபார்ப்பேன். இதற்குள் காலை மணி
8-30 ஆகி இருக்கும் !
கொண்டு வந்துள்ள காலை உணவை
அருந்திவிட்டு, காவலர் மூலம் தேநீர் வரவழைத்து அருந்துவேன்.
பணியமைப்புப் பிரிவு
(ESTABLISHMENT SECTION) என்
கண்காணிப்பில் இருந்ததால், அலுவலர்களின் நலன் சார்ந்த கோப்புகளில்
காலத்தாழ்வின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா
என்பதை ஆய்வு செய்வேன். என்னுடைய காலை நேரப் பணி இவ்வாறு போய்க்
கொண்டிருக்கையில் அலுவலர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்குவர் !
மாலை
4-00 மணிக்கு ஒரு இருப்பூர்தி சேலம் வழியாக பெங்களூர் செல்லும்.
அதைத் தவறவிட்டால் இரவு 7-00 மணிக்குத் தான் அடுத்த
வண்டி. எனவே முதல்வர் மற்றும் ஆட்சி அலுவலரிடம் சொல்லிவிட்டு,
4-00 மணி இருப்பூர்தியைப் பிடித்து சேலத்தில் இறங்கி வீட்டிற்குச் செல்ல
மாலை மணி 6-00 ஆகிவிடும் !
இவ்வாறு காலை
4-30 மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டு அலுவலகம் சென்று பணிபுரிந்து
விட்டு மாலை 6-00 மணிக்கு வீட்டிற்குத் திரும்ப வரும் எனது அன்றாட
வாழ்க்கை சற்று இன்னல் மிக்கதாகவே இருந்தது. பிள்ளைகளின் படிப்பை
எண்ணி, ஈரோட்டுக்குக் குடியிருப்பை இடம் மாற்றாமல் சேலத்திலேயே தொடர்ந்து
வாழ்ந்திட முடிவு செய்ததால், என் இன்னல்கள் எனக்கு ஒரு பொருட்டாகத்
தெரியவில்லை !
வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை, தொடர்ந்து ஓராண்டு காலத்திற்கு நான் வைத்துக் கொள்ள சேலம் அலுவலகத் தட்டச்சர்
திருமதி.அன்னபூரணி, அமைச்சர் திரு.செல்வகணபதியிடம் சொல்லி உரிய ஆணை பெற்றுத் தந்தார் !
அலுவலகப் பணிகள் இவ்வாறு
சென்று கொண்டிருக்க, என் மைத்துனர்கள் திரு.சூரியமூர்த்தி மற்றும் திரு.ஜீவானந்தத்திற்குத் திருமணம்
உறுதியாயிற்று. வேதாரணியம் வட்டம், தென்னடாரைச்
சேர்ந்த திரு.ச.பொன்னுத்துரை என்பவரின்
மகள் செல்வி. ஆனந்தவள்ளியை திரு.சூரியமூர்த்தி மணக்க இருந்தார் !
இத்திருமணம்
1993 ஆம் ஆண்டு மே மாதம், 17 ஆம் நாள் திருத்துறைப்
பூண்டி பெரியநாயகி அம்மன் திருமண மண்டகத்தில் நடைபெற்றது !
இதற்கு ஒரு வாரம் கழித்து, மே மாதம் 23 ஆம் நாள் திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவலஞ்சுழியைச் சேர்ந்த திரு.சுப்ரமணியன் என்பவரின்
மகள் செல்வி. சாந்தியை திரு.ஜீவானந்தம் மணந்தார் !
இத்திருமணமும் திருத்துறைப்பூண்டி
பெரியநாயகி அம்மன் திருமண மண்டகத்திலேயே நடைபெற்றது. ஒரு வார இடைவெளியில் இரு மைத்துனர்களின்
திருமணமும் நடைபெற்றதால், நானும் குடும்பத்துடன் வந்து பத்து
நாள்கள் தங்க வேண்டியதாயிற்று !
இதற்கிடையில் ஈரோட்டிலிருந்து
மீண்டும் சேலத்திற்கு இடமாற்றல் பெற்றிட பல வழிகளில் முயன்று வந்தேன். அப்போது திருத்துறைப்பூண்டி பள்ளியில் என் வகுப்புத் தோழராக இருந்தவரும்,
பிற்காலத்தில் என் மைத்துனர் திரு.பாஸ்கரனின் மனைவி திருமதி.பிரேமாவின் பெரியப்பா மகன் என்ற வகையில் உறவினராக
அமைந்தவருமான திரு.கே.வி.பழனித்துரை தமிழக அரசின் திட்டக் குழுவில் முழுநேர உறுப்பினராகப் பணியில் இருந்தார்.
இந்திய ஆட்சிப் பணிக்கு (I.A.S) இணையான பதவி திட்டக்
குழு உறுப்பினர் பதவி !
அவரிடம் சென்று என் இடமாற்றலைப்
பற்றிக் கூறினேன். அவருடைய உதவியால் இடமாற்றல் கிடைத்தது. 1993 ஆம் ஆண்டு சூன் மாதம்
10 ஆம் நாள் ஈரோடு தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்திலிருந்து விடுவிப்புப்
பெற்று மறு நாள் சேலம் அலுவலகத்தில், அலுவலக மேலாளராக மீண்டும்
பணியில் இணைந்தேன் !
இப்பொழுது நான் பணியமைப்புப்
பிரிவின் கண்காணிப்புப் பணியை ஏற்றுக் கொண்டேன். இங்கு
இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்த திரு.வே.அழகரசன் என்பவருக்குப்
பணி வரன்முறை செய்யும் நாள் பற்றிய பிரச்சினை ஒன்று இருந்தது. அவருக்கு ஆதரவாக விதிமுறைகளைச் குறிப்பிட்டுக் காட்டி நான்கு பக்க அளவுக்கு
ஆங்கிலத்தில் ஒரு விண்ணப்பம் எழுதித் தந்தேன் !
அதைப் படித்துப் பார்த்த
துணை இயக்குநர் நிலை முதல்வர் திரு.ஆர்.ஷேக்அகமது அவர்கள் எந்த வழக்குரைஞரிடம் இந்த விண்ணப்பத்தை எழுதி வாங்கினீர்கள் என்று அழகரசனிடம் கேட்டிருக்கிறார்
!
அவர் அலுவலக மேலாளர் திரு.வேதரெத்தினம்
எழுதித் தந்தார் என்று சொல்லி இருக்கிறார். முதல்வர் என்னை
அழைத்து வெகுவாகப் பாராட்டியதுடன் பயிற்சி நிலையம் தொடர்பான எந்தப் பிரச்சினையானாலும் என்னிடம் மட்டுமே கலந்து ஆலோசனை செய்யும்
வழக்கத்தை மேற்கொள்ளலானார் !
நாகப்பட்டினத்தில் பணிபுரிகையில்
திரு.பத்மநாபன் என்னும் தட்டச்சருக்கு பணி நீட்டிப்புக்கு உதவி செய்தேன் என்று காலச்
சுவடுகளில் முன்னதாக நான் குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா ? அதற்கு
நன்றிக் கடன் ஆற்றும் வகையில் தட்டச்சுப் பணிக்கு வரும் அனைத்து அரசு ஆணைகளையும் கூடுதலாக
ஒரு படி எடுத்து எனக்குத் தரலானார் !
அத்துடன், ஓய்வு நேரங்களில் பழைய ஆணைத் தொகுதிகளைப் புரட்டிப் பார்த்து முதன்மையான ஆணைகள்
பலவற்றை நானே தட்டச்சு செய்து சேர்த்து வரலானேன் !
இவ்வாறு என்னிடம்
15,000 அரசாணைகள் சேர்ந்து விட்டன. இவ் வழக்கத்தின்
விளைவாக 25 அரசாணைத் தொகுதிகள் என்னிடம் சேர்ந்துவிட்டன.
பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இப்பணி தொடர்ந்து கொண்டே இருந்தது
! அவற்றை வகைப்படுத்தி, அதற்கு அட்டவணையும் தயாரித்து
வைத்திருந்தேன் !
எதைப் பற்றிய அரசாணை வேண்டுமென்றாலும்
அது எந்தத் தொகுதியில் எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு
குறியீட்டு அட்டவணைகளையும் உருவாக்கி வைத்துக் கொண்டேன். இத்தகைய ஏற்பாட்டால், அரசு ஆணைகள் பற்றிய புரிதலில் கைதேர்ந்து
விளங்கலானேன் !
எந்தத் தொழிற் பயிற்சி
நிலையத்தில் எந்த அலுவலருக்கு எந்த அரசாணை வேண்டுமென்றாலும் அவர்கள்
என்னைத் தொடர்பு கொண்டு கேட்கும் நிலை அப்போது நிலவியது !
பண்டகக் காப்பளர் பதவியிலும்
சரி,
அலுவலக மேலாளர் பதவியிலும் சரி எனக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக் கொண்டு
செயல்பட்டதால், அனைத்துத் தொழிற் பயிற்சி நிலைய அலுவலர்களிடமும்
நன்கு அறிமுகமான, மதிப்பு மிக்க ஒரு அலுவலராக நான் உயர்ந்து நின்றேன் !
அரசுப்பணியினின்று நான்
ஓய்வு பெறுகையில் இந்த அரசாணைகள் தேவைப்படுவோருக்குப் பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில்,
அப்போது உதவி இயக்குநராக இருந்த திரு.இரவிச்சந்திரன்
அவர்களிடம் மகிழ்ச்சியுடன் ஒப்படைத்துவிட்டு வந்தேன் !
சேலத்திலிருந்து நான் பிறந்த
ஊரான கடிநெல்வயல் 290 கி.மீ தொலைவில்
உள்ளது. இடையில் நிற்காமல் சீருந்தில் பயணித்தால் 8 மணி நேரமாகும். அங்கு தான் என் பங்காளிகள் இருக்கிறார்கள்
!
என் (ஒன்றுவிட்ட) அண்ணன் திரு.மீனாட்சிசுந்தரம்
அவர்களின் வீட்டில் தங்கியிருந்த அவரது மாமியார் திருமதி.அரங்கம்மாள்
1994 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 -ஆம் நாள் இயற்கை
எய்தினார். சேலத்திலிருந்து உடனடியாக என்னால் போக முடியவில்லை
!
எனவே 15 ஆம் நாள் சடங்குகளின் போது சென்று வந்தேன். உறவினர் வீடுகளில்
நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும் நாம் அதில் பங்கு பெறுதல், நமது
கடமை அல்லவா ? உறவுகள் நிலைக்க – நீடிக்க
இதை நாம் செய்து தான் ஆகவேண்டும் !
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),09]
{22-05-2020}
-------------------------------------------------------------------------------------------
சேலம் இருப்பூர்தி நிலையம்
அன்றாடம்
சேலத்திற்கும் ஈரோட்டிற்குமாக
என்
இருப்பூர்திப் பயணம்
ஓடிக்கொண்டிருந்தது.
ஈரோடு
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்.
திருத்துறைப் பூண்டி
பிறவி மருந்தீசர் கோயில்
திருத்துறைப்பூண்டி
பெரிய கோயிலில்
உள்ள மரகதலிங்கம்
திரு.இரகு.சூரியமூர்த்தி.
இவரது திருமணம்
17-05-1993 அன்று
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
திரு.சூரியமூர்த்தி - செல்வி ஆனந்தவள்ளி
திருமண அழைப்பிதழ்.
திரு.இரகு.சீவானந்தம்.
இவரது திருமணம்
திருத்துறைப்பூண்டியில்
23-05-1993 அன்று நடைபெற்றது.
திரு.சீவானந்தம் - செல்வி சாந்தி
திருமண அழைப்பிதழ்.
திரு.அ.மீனாட்சிசுந்தரம்
அவர்களின் மாமியார்
திருமதி.அரங்கம்மாள் அம்மையார்.
No comments:
Post a Comment