தமிழ்ப்
பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு
(AUTOBIOGRAPHY) !
காலச் சுவடுகள் : 1982-1983 நிகழ்வுகள் !
(சுவடு.28) இளவரசி வருகை !
சேலம், பள்ளக்காடு திரு.கே.ஆர்.
சீனிவாசன் வீட்டில் எத்துணை மாதங்கள் குடியிருந்தோம் என்பது நினைவில்லை.
12 அல்லது 14 மாதங்கள் இருக்கலாம். பின்பு, 1982 –ஆம் ஆண்டில் ஒரு நாள் அய்யந்திருமாளிகை
வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில்
400 ஆம் இலக்க வீட்டிற்கு வந்துவிட்டோம். இந்த
வீட்டிற்கு வந்த பிறகு, வீட்டுப் பயன்பாட்டுக்கு இரண்டு கூடுதல்
வசதிகளை ஏற்படுத்தித் தந்தேன் !
வீட்டில் சமையற் பணிக்கு
மண்ணெண்ணெய் அடுப்புதான் (KEROSENE STOVE) பயன்பட்டு வந்தது.
வளிம உருளைகளால் ஏற்படக்கூடிய ஊறுகள் பற்றிய அச்ச உணர்வு நிலவியதால்,
வளிம இணைப்புக் (GAS CONNECTION) கோரி நான் பதிவு
செய்யவில்லை. கடைசலியல் (TURNER) பிரிவில்
உதவிப் பயிற்சி அலுவலராகப் பணியாற்றி வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.சண்முகம் பிள்ளை என்பவர் ஒரு நாள், வீட்டிற்கு வந்திருந்தார்
!
வீட்டில் வளிம இணைப்பு
(GAS
CONNECTION) இல்லாததை அறிந்த அவர் என்னிடம் குறைப்பட்டுக்
கொண்டார். பிறகு என்னுடன் வாருங்கள் என்று கூறி என்னை அழைத்து கொண்டு, புதிதாகத் தொடங்கப் பெற்றிருந்த
ஒரு வளிம முகமையிலிருந்து அன்றே வளிம உருளையும், அடுப்பும் வாங்கித்
தந்தார். என் அன்னையிடமும் மனைவியிடமும் பேசி அவர்களது அச்சத்தையும்
போக்கி, அன்று முதல் வளிம உருளை கொண்டு சமையற் பணியத் தொடங்கிடவும்
செய்தார் !
என் இல்லத்தார் மனதில்
ஏற்பட்ட தவறான அச்ச உணர்வு, வளிம இணைப்புப் பெறுவதைப் பத்து
ஆண்டுகளாகத் தடுத்து நிறுத்தி வந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்தாலும் சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது !
வீட்டிற்கு பொறியுரல்
(WET GRINDER) ஒன்று தேவையாக இருந்தது. தரமானதாகவும் நீண்ட நாள் உழைக்கக் கூடியதாவும் ஒன்றை வாங்க
வேண்டும் என்று நீண்ட நாள்களாக எண்ணியிருந்தேன். ஒரு நாள் மனைவியை அழைத்துக் கொண்டு சேலம் கடைத்தெருவுக்குச்
சென்றிருந்தேன் !
அங்கு முதல் அக்ரகாரம்
என்னுமிடத்தில் ஏ.கே.பாலசுப்ரமணியம் என்பவரின் கடையில் புதுவிதமான ஒரு
பொறியுரலைக் (PRESSURE TYPE) கண்டேன். அவரது
சொந்தத் தயாரிப்பு. வேறு கடைகளில் கிடைக்காது; வேறு ஊர்களிலும் கிடைக்காது. அதன் அமைப்பும், செயல்படும் முறையும் எங்களுக்குப் பிடித்திருந்தது. அதன்
விலை உருபா 2300/=, அன்றைய நிலையில் !
இந்தப் பொறியுரலை
1983 ஆம் ஆண்டு சூன் மாதம் 25 ஆம் நாள் வாங்கி
வந்து அன்றே வீட்டில் இயக்கிப் பார்த்தோம். அதன் இயக்கம் மன நிறைவைத்
தந்தது. அந்தப் பொறியுரல்
தான் கடந்த 37 ஆண்டுகளாக எங்கள் இல்லத்தின் தேவையை நிறைவு செய்து
வருகிறது. தரம் உயர்வாக இருந்தால் உழைப்பும் உயர்வாக இருக்கும்
என்பதே இப்பொறியுரல் எனக்குக் கற்றுத் தந்த பாடம் !
சேலம் எனக்கும் என் இல்லத்தாருக்கும்
மிகவும் பிடித்தமான இடம். கோடைக்காலமான ஏப்ரல், மே இரு மாதங்கள் தவிர எஞ்சிய 10 மாதங்களும் உடலுக்கும்
மனதுக்கும் இனிமை தரும், உகப்பான வானிலையே அங்கு நிலவும்.
கம்பு, சோளம், கேழ்வரகு,
மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, மல்லிகைச் செடி என்று விளை பயிர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதனால் பூச்சித் தொல்லை அங்கு காணப்படவில்லை. பொன் விளையும்
பூமி என்பது சேலத்திற்குத் தான் பொருந்தும் !
சேலத்து மக்கள் அகவை வேறுபாடு இன்றி ஆண்களை “அண்ணே” என்பார்கள்; மகளிரை
“அக்கா” என்பார்கள். ஐம்பது
அகவை ஆண், 35 அகவைப் பெண்ணை ”அக்கா”
என்று அழைப்பது, மகளிர் மேல் அவர்கள் வைத்திருக்கும்
நற்பண்பைக் காட்டுவதாக நான் உணர்ந்தேன். சிறு அகவையினரைக்
“கண்ணு” என்று அழைப்பார்கள். ஆண், பெண் வேறுபாடு இன்றி அத்துணை பேரும் மிகச் சிறந்த
உழைப்பாளிகள் !
சேலத்தில் நான் பணிபுரிகையில், என் உறவினர்கள் வகையில் இரண்டு திருமணங்களும் ஒரு மறைவும் நிகழ்ந்தது. என் பெரிய மாமனாரின் பெயரனும்,
மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய திரு.கணபதி – கனகாம்புசம் இணையரின் மூத்த மகனுமான பொறியாளர்
திரு.சிங்காரவேலு – செல்வி.சாந்தி திருமணம்
1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் நடைபெற்றது. திருமணத்தில் என் மனைவி மட்டும் கலந்துகொண்டதாக நினைவு !
இன்னொரு மணவிழாவும் என்
நினைவில் முதன்மை இடம் பெற்ற ஒன்று. என் ஒன்றுவிட்ட அண்ணனும் கடிநெல்வயல்
பட்டா மணியாருமான திரு.கா.இருளப்ப தேவரின்
மகன் திரு.இராமலிங்கம் ஆய்மூர் திரு.முத்தையன்
அவகளது மகள் மு.திலகவதியை வாழ்க்கைத் துணையாக ஏற்ற நிகழ்வு 1982 ஆம் ஆண்டு,
சூலை மாதம் 2 ஆம் நாள் நடைபெற்றது. சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே சூலை மாதம் 2 ஆம் நாள் தான் என் திருமணமும் நடந்திருந்தது. இந்த விதத்தில்
என்னால் மறக்கமுடியாத ஒரு திருமணமாக இஃது அமைந்துவிட்டது !
துன்பியல் நிழ்வு ஒன்றைப்
பற்றி இங்கு சொல்லியே
ஆகவேண்டும். அஃது என் பெரிய மாமனாரின் ஆறாவது மகன் திரு.நித்தியானந்தத்தின் மறைவு. திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே
அவர் மறைந்து போனார். திருவெறும்பூரில் நான் குடும்பத்துடன் தங்கியிருந்த
“ஜலால் வளவு”க்கு அவர் அடிக்கடி வருவார்
!
என் மனைவி அவரது சிற்றப்பா
மகளல்லவா
? அன்பாகப் பழகுவார்; இனிமையாகப் பேசுவார்.
1982 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் நாள் நிகழ்ந்த
அவரது எதிர்பாராத மறைவு சூறாவளியாகச் சுழன்று எங்களைத் தாக்கிவிட்டு மறைந்து போனது !
சேலத்தில் பணியாற்றிய போது, பயிற்சி நிலைய அளவில் என் பணித் திறமையால் அனைவரையும் ஈர்த்திருந்தேன்.
அதிலும் முதல்வர் திரு.இரா. அ. தங்கவேலு என் மீது நிரம்பவே அன்பு வைத்திருந்தார்.
அப்பொழுது பயிற்சி நிலையத்தில் வார்ப்பியல் பிரிவில் படித்து விட்டு
என் மைத்துனர் திரு.சூரியமூர்த்தி என்பவர் வேலை வாய்ப்பு அமையாமல்
வீட்டில் வாளாவிருந்தார் !
சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தில்
உருவான பணிமனை உதவியாளர் பணியிடத்திற்குத் திரு. சூரியமூர்த்தியைத்
தேர்வு செய்து அமர்த்திட நான் முயன்றேன். முதல்வரும் உதவி செய்வதாகக் கூறியிருந்தார்.
முதல்வர்தான் பணிஅமர்த்தும் அதிகாரம் பெற்ற அலுவலர். 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் நேர்காணலுக்கான
ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பத்துப் பேர்களுக்கு மேல் பணிவேட்போர்
(CANDIDATES) வந்திருந்தனர் !
நேர்காணல் முறையாக நடந்தது. திரு.சூரியமூர்த்தியின் செயல்பாடு நன்றாகவே இருந்தது. எனவே
அவரைத் தேர்வு செய்து பணியமர்வு ஆணையும் தயாரானது. அந்த நேரத்தின்
முதல்வர் அறையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. முதல்வர் எடுத்துப்
பேசினார் !
அரண்தாங்கி திருநாவுக்கரசு
எதிர்முனையில். அப்போது அவர் தமிழக அமைச்சர். வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரைத் தேர்வு செய்யுமாறு அவர் குரல் ஒலித்தது.
திரு.சூரியமூர்த்திக்கு வந்த வாய்ப்பு விலகிப்
போயிற்று. இன்றும் கூட அரசியல்வாதிகளின் துணையால் வளமானவர்கள்,
மேலும் வளம் பெறுகிறார்கள்; வசதியுடன் வாழ்கிறார்கள்;
எளியவர்கள் இடர்பட்டு ஏங்கித் தவிக்கிறார்கள் ! இதுதான் தமிழ்நாட்டின் நியதி போலும்
!
அரசியலில் அமைதியானவர்களும்
இருக்கிறார்கள்; அடாவடிக்காரர்களும் இருக்கிறார்கள்.
என் மாமனார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்தார். அவரது அண்ணன் திரு.அமிர்தலிங்கம் பிள்ளை மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சியில்
இணைந்திருந்தார். இருவருமே அமைதியானவர்கள் !
திரு.அமிர்தலிங்கம் பிள்ளையின் மகன் பெயர் திரு.மார்க்ஸ்.
வழக்குரைஞரான அவருக்கும் மன்னை வட்டம் ஒரத்தூரைச் சேர்ந்த செல்வி.
முத்துலட்சுமி என்பவருக்கும் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 4 ஆம் நாள் திருமணம் நடைபெற்றது !
சேலத்திலிருந்து குடும்பத்துடன்
சென்று திருமணத்தில் கலந்து கொண்டேன் ! நான் முன்பு
ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருப்பதைப்போல திருமணம் என்பது உறவினர்கள் சந்திப்புத் திருவிழா அல்லவா ! போகாமல் இருக்க முடியுமா ?
1983 ஆம் ஆண்டு
இன்னொரு வகையில் சிறப்புப் பெற்ற ஆண்டு. என் இல்லத்திற்குப் புதிய
வரவு நிகழ்ந்த நாள். ஆம் ! என் மனைவிக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது
– பெண் குழந்தை ! 1983 ஆம் ஆண்டு ஆகத்து மாதம்
14 ஆம் நாள் பிறந்த இப் பெண் குழந்தைக்கு இளவரசி என்று பெயர் சூட்டி
வளர்த்தோம் !
என் மடிக்கணினியில், எழுத்துருக்களைத் தட்டித் தட்டிக் காலச் சுவடுகளின் இந்தப் பகுதியை உள்ளீடு
செய்யும் பணி, திருமணமாகி ஓசூரில் வாழ்ந்து வரும் இளவரசியின் வீட்டில் இருந்துதான் நடைபெறுகிறது என்பது வியப்பூட்டும் தற்செயல் நிகழ்வு
! வாழ்க்கையில் தற்செயலாக நிகழ்பவற்றுள் இதுவுமொன்று ! ஆயினும் வியப்புக்குரிய
நிகழ்வன்றோ !
சேலத்தில் என்னுடன் பணிபுரிந்தவர்கள்
எண்பதுக்கும் மேற்பட்டோர். அலுவலகத்தில் உடன் பணிபுரிந்தோர்
திருவாளர்கள் ஜி.பி.நாகராசன். எஸ்.டி.அல்லாபக்க்ஷ், எஸ்.வினோபா, சா.இராமமூர்த்தி,
ஆ.முத்துச்சாமி. எம்.வி.வேலன், அன்பழகன், வி.அழகரசன், அப்துல் காதர்,
முகமது முஸ்தபா, புருஷோத்தமன் இன்னும் பலர்
!
முதல்வராகப் பொறுப்பு வகித்தவர்கள்
திரு. தா.அரங்கநாதன், திரு. ஆர்.ஷேக் அகமது, திரு. எஸ்.பி.இராஜாராம், திரு. பி.வி.சேதுநாதன், திரு. ஜி.சுப்ரமணியன், திரு. இரா.அ.தங்கவேலு, ஆகியோர் பெயர்கள் நினைவில் இருக்கின்றன.
ஆட்சி அலுவலராகப் பணியாற்றியோர் திரு.எஸ்.வீரராகவன், திரு.முகமது கனி யூசூப்,
திரு.ஆர்,சீனிவாசன்,
திரு.அ.பாலசுப்ரமணியன் ஆகியோர்
!
பண்டகத்தில் என உதவியாளராகப்
பணியாற்றிய திரு.கே.இராசரத்தினம்.
திரு.கோ.கிருட்டிணன் இருவரும்
இன்றும் என் கண்கள் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றனர் !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),04]
{17-05-2020}
----------------------------------------------------------------------------------------------
திரு.இராமலிங்கம் - செல்வி.திலகவதி .
இவர்களது திருமணம்
நடைபெற்ற : நாள் : 02-07-1982
இராமலிங்கம் - திலகவதி.
திருமண அழைப்பிதழ்.
இளவரசி பிறப்பு: 14-08-1983.
சேலத்தில் பரவலாக
விளைவிக்கப்படும் மரவள்ளி !
சேலத்தில் வாங்கிய பொறியுரல் :
வாங்கிய நாள்: 25-06-1983
வளிம இணைப்புப் பெற்று வீட்டில்
பொங்கல் வைத்தல்
(உண்மைப் படம் அல்ல ! )
திரு.சு.நடராசன்,
கூடுதல் பண்டகக் காப்பாளர்
திரு.ப.இராசேந்திரன்,
வடைபடப் பிரிவுப் பயிற்றுநர்
திரு.கு.இரவிச்சந்திரன்,தட்டச்சர்,
அ.தொ.ப.நி.சேலம்.
No comments:
Post a Comment